Published : 08 Dec 2014 03:27 PM
Last Updated : 08 Dec 2014 03:27 PM

உங்கள் தியாகம் வீணாகாது: காஷ்மீரில் மோடி பேச்சு

ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஆண்டாண்டு காலமாக செய்த தியாகங்கள் அனைத்தும் வீணாகாமல், நடந்து வரும் தேர்தலின் மூலம் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என்று பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் கூறினார்.

காஷ்மீர் மாநிலம், சம்பாவில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், "பல காலமாக ஆட்சி செய்த காங்கிரஸ் குடும்பம் காஷ்மீருக்காக என்ன செய்திருக்கிறது? இனி மேலும் அவர்கள் எதையும் செய்வார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. 60 ஆண்டுகளில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. வேலை செய்யாமல் இருப்பவர்களை நீக்க வேண்டியது உங்களது கடமை.

அதனால்தான் நான் உங்களை சந்திக்க வந்துள்ளேன். இனி நான் மாதம் ஒருமுறை உங்களை சந்திக்க வருவேன். அப்போது உங்களின் பிரச்சினைகளை என்னிடம் கூறலாம். காஷ்மீரில் வளர்ச்சி காண தொங்கு சட்டப்பேரவை தேர்ந்தெடுக்கப்படக் கூடாது.

நீங்கள் உங்களது சொந்த மாநிலத்திலேயே இடம்பெயர்ந்து வாழ்கிறீர்கள். உங்களுக்கான முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். மறு கட்டமைப்பு ஏற்பட வேண்டும். காஷ்மீரிகள் விடுதலை பெற பாஜக அரசு இங்கு அமைய வேண்டும். அதற்கு காங்கிரஸை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்.

காஷ்மீருக்கு வளர்ச்சி, வேலைவாய்ப்பு என பல தேவைகள் உள்ளன. ஜம்மு - காஷ்மீர் மக்கள் எப்போதும் போற்றப்பட வேண்டியவர்கள். கடும் பனி, பயங்கரவாத தாக்குதல், அச்சுறுத்தலை மீறி ஜனநாயகத்தை நிரூபிக்க நீங்கள் அனைவரும் வாக்களித்துள்ளீர்கள். பதிவாகி இருக்கும் 70 முதல் 80 சதவீத வாக்குகள் உங்களது தேவையை உணர்த்தியுள்ளன. உங்களின் தியாகம் வீணாகாது" என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரத்தை சீர்குலைக்க பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்ததை அடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x