

ட்விட்டரில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பொறியாளர் மேக்தி மஸ்ரூருக்கு தீவிரவாத இயக்கத்தினருடன் நேரடி தொடர்பு இருந்ததாக போலீஸ் தரப்பில் சந்தேகம் எழுந்துள்ளது.
மேக்தியின் ட்விட்டர் வலைத்தளத்தின் டி.எம்- (டைரக்ட் மெசேஜ்களில்) இருந்து அனுப்பபட்ட தகவல்களை ஆராய்ந்தபோது இது தெரியவந்ததாக போலீஸார் கூறியுள்ளனர்.
இதுதொடர்பான ஆவணங்கள், ட்விட்டர் குறுஞ்செய்திகள் ஆகியனவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல், தானே பகுதியைச் சேர்ந்த மேலும் 3 பேர் குறித்த விவரமும் மேக்திக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருப்பதாக வியாழக்கிழமை அன்று நீதிமன்றத்திடம் அளிக்கப்பட்ட போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூருவை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக ட்விட்டரில் செயல்பட்டு வருகிறார். அந்த அமைப்புக்குஆள் சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார் என பிரிட்டனை சேர்ந்த 'சேனல் 4' தொலைக்காட்சி ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டது.
இந்த செய்தி பெங்களூருவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை தொடங்கியது. டிசம்பர் 12-ஆம் தேதி அதிகாலை பெங்களூரு ஜாலஹள்ளி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த ஐடி நிறுவன ஊழியர் மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்பவரை போலீஸார் கைது செய்து அவரை நீதிமன்ற காவலில் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மேக்தி மஸ்ரூரின் நீதிமன்ற காவல் ஜனவரி 2-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதுடன் அவரை மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே மேக்தி மஸ்ரூரிடம் மேற்கொண்ட விசாரணை ஒரு பகுதியான தகவலை 4 பக்க அறிக்கையாக விசாரணை அதிகாரி எம்.கே. தம்மாய்யா நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சமர்பித்தார். விசாரணை அறிக்கையில் பல புதிய தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், அதிர்ச்சியூட்டும் வகையாக, பொறியாளர் மேக்தி மஸ்ரூர், ஐ.எஸ். அமைப்பினருடன் நேரடி தகவல் தொடர்பில் இருந்துள்ளதும், அவர் ட்விட்டர் வழியாக மட்டும் சுமார் 14,000 நேரடி செய்திகளை தீவிரவாதிகளுடனும் அவர்கள் குறித்த விவரங்களையும் பரிபாறியுள்ளதும் தெரியவந்துள்ளதாக போலீஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே பெறப்பட்டுள்ள அனைத்து ட்விட்டர் தகவல் தொடர்பு செய்திகளும் குற்றத்துக்கு உட்படுத்தும் வாக்குமூலமாக நீதிமன்றத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.