Published : 31 Dec 2014 08:01 PM
Last Updated : 31 Dec 2014 08:01 PM

போலி பெண் சாமியார் பேச்சைக் கேட்டு பெற்ற தாயைக் கொடூரமாகக் கொன்ற சகோதரர்கள்: மகாராஷ்டிராவில் பயங்கரம்

"உங்கள் பணக்கஷ்டம் தீர வேண்டுமென்றால் பலிகொடுப்பது அவசியம் என்று பெண் மந்திரவாதி கூறியதால் பெற்ற தாயையும், இரு சகோதரர்கள் கொன்றனர்."

அக்டோபர் 30-31 தேதிகளுக்கு இடையிலான நள்ளிரவில் மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. ஆனால், பலியிடப்பட்ட இரண்டு பேர்களின் உடல்கள் திரம்பகேஸ்வரில் உள்ள தேகிஹார்ஷ் என்ற கிராமத்தில் கிடைத்ததையடுத்து துப்பு துலக்கப்பட்டு இந்தச் செய்தி இரண்டு சகோதரர்களை கைது செய்த பிறகே வெளியாகியுள்ளது.

கொலை செய்யப்பட்ட தாயாரின் பெயர் புதாபய் டோரி (65), இவரது உறவினர் காஷிபாய் வீர் (வயது 80).

இந்த பயங்கரக் கொலைகள் தொடர்பாக போலீஸார் தாயைக் கொலை செய்த 2 சகோதரர்கள் உட்பட 10 பேரை கைது செய்து, பல்வேறு கிரிமினல் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இது பற்றி போலீஸ் தரப்பு கூறுவதாவது: காசிநாத், கோவிந்த் டோரி என்கிற 2 சகோதரர்கள் பொருளாதார அளவில் கஷ்டமான காலத்தில் இருந்துள்ளனர். இதனையடுத்து யார் யார் பேச்சையோ கேட்டு பெண் மந்திரவாதி பச்சிபாய் காட்கே என்பவரைச் சென்று சந்தித்துள்ளனர். தங்களது குடும்ப உறுப்பினர்கள் விவரம் உட்பட அனைத்தையும் அந்த பெண் மந்திரவாதியிடம் தெரிவித்துள்ளனர்.

அந்த மந்திரவாதி உடனே, சகோதரர்களின் தாயார் புதாபாய் டோரி மற்றும் அவரது சகோதரி ஆகியோரிடையே தீயசக்திகள் உள்ளன. அத்தீய சக்திகளை ஒழித்தால் மட்டுமே உங்கள் கஷ்டம் நீங்கும் என்று கூறியிருக்கிறார்.

இந்த சகோதரர்கள் தினக்கூலியாக பணியாற்றி வருகின்றனர்.

“பெண் மந்திரவாதி பச்சிபாய் காட்கேயின் அறிவுரையின் படி சகோதரர்கள் தன் தாயார் புதாபாய் டோரியையும் அவரது சகோதரி ராஹிபாய் பிங்ளி என்பவரையும் அழைத்து வந்தனர். 80 வயது உறவினர் காஷிபாய் வீர் என்பவரும் உடனிருந்துள்ளார். பூஜை செய்வதான பாவனையுடன் தொடங்கியது பரிகாரம்.

திடீரென அந்தப் பெண் மந்திரவாதி சகோதரர்களின் தாயார் புதாபாயையும், 80 வயது காஷிபாய் மற்றும் ராஹிபாய் பிங்ளி ஆகியோரை தாறுமாறாக அடித்து நொறுக்கத் தொடங்கினர். இதில் 65 வயது தாயார் புதாபாய் மற்றும் 80 வயது காஷிபாயும் கொலை செய்யப்பட, ரிஷிபாய் பிங்கிள் எப்படியோ அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்”என்று நாசிக் ஊரகக் காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சய் மோஹித் கூறினார்.

கொலை செய்ததோடு புதாபாயின் கண்களையும் எடுத்துள்ளார் பெண் மந்திரவாதி. நவம்பர் 1ஆம் தேதி தாயார் மற்றும் காஷிபாய் உடல்களை சகோதரர்கள் கிராமத்தில் இருந்த வயல் ஒன்றில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர்.

தப்பிச் சென்ற ராஹிபாய் பிங்ளி பிற்பாடு மூடநம்பிக்கை ஒழிப்பு சமூக ஊழியர் பக்வான் மாதே என்பவரைச் சந்தித்து கடந்த வாரத்தில்தான் நடந்த பயங்கரத்தைத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூடநம்பிக்கைத் தடுப்புச் சட்டத்தை இயற்றியது. ஆனால், சட்டத்தின் மூலம் மூடநம்பிக்கையை தடுத்து விட முடியுமா, மூடத்தன பயங்கரவாதத்திற்கு மகாராஷ்டிராவில் பலியாவோருக்கு அரசின் பதில் என்ன? போன்ற கேள்விகள் அங்கு சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x