

சாரதா நிதி நிறுவன முறைகேட்டில் கைது செய்யப்பட்டுள்ள மேற்கு வங்க அமைச்சர் மதன் மித்ராவை 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த வழக்கில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிண மூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் சிரின்ஜோய் போஸ், குனால் கோஷ் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப் பட்டுள்ளனர். இந்நிலையில், மேற்கு வங்க மாநில போக்குவரத்து மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள மதன் மித்ராவை நேற்று முன்தினம் சிபிஐ அதிகாரிகள் கைது செய் தனர்.
அவருக்கு ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொல்கத்தா முதன்மை நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி நிராகரித்தார். அதே சமயம், மதன் மித்ராவை காவலில்வைத்து விசாரிக்க அனுமதியளிக்க வேண்டும் என்ற சிபிஐ அதிகாரி களின் கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டார். டிசம்பர் 13 (நேற்று) முதல் 16-ம் தேதி வரை 4 நாட்களுக்கு சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி யளித்தார்.
மதன் மித்ரா, சாரதா நிறுவனத்தின் வாடிக்கையாளர் கள் கூட்டத்தில் பங்கேற்று, அந்நிறு வனத்தின் தலைவர் சுதிப்தோ சென்னை புகழ்ந்து பேசியுள்ளார். அது தொடர்பான வீடியோ, போட்டோ ஆதாரங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மதன் மித்ராவுக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக அளித்த சாரதா நிறுவனத் தலைவர் சுதிப்தோ சென், அந்த காரின் ஓட்டுநருக்கான சம்பளம், எரிபொருளுக்கான பணம் உள்ளிட்டவற்றையும் தந்துள்ளார். அதோடு, சுதிப்தோ சென்னிட மிருந்து கோயிலொன்றுக்கு பெரும் தொகையை நன்கொடையாக மதன் மித்ரா பெற்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது. எனவே, மதன் மித்ராவுக்கும், சாரதா நிதி நிறுவன முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம் என்று சிபிஐ கருதுகிறது.
மதன் மித்ராவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொல்கத்தா முதன்மை நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி நிராகரித்தார்.