

தற்போது மத்தியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் அரசு பாரதிய ஜனதா கட்சி அரசு அல்ல. அது மோடி அரசு என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
கேரளத்தில் கேரள பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
"பா.ஜ.க.வில் மோடி மட்டும்தான் பேசுகிறார். அவர் மட்டும்தான் முடிவெடுக்கிறார். இது பா.ஜ.க. அரசு அல்ல. மோடி அரசு. அந்த அரசு மூன்று அல்லது நான்கு பெருநிறுவனங்களுக்காக உழைக்கிறது.
இந்த அரசுடன் வாஜ்பாய் தலைமையிலான அரசை ஒப்பிடும்போது அப்போதிருந்த நிலைமையே வேறு. வாஜ்பாய் அரசுடன் எங்களுக்குக் கருத்து வேறுபாடுகள் இருந்தன. எனினும் அவர் தன் கட்சியினர், எதிர்க்கட்சியினர் ஆகியோர் சொல்வதை காதுகொடுத்துக் கேட்டார். இப்போது பா.ஜ.க.வில் யாருமே வாய்திறக்க முடியாது. அவர்கள் எங்களையும் நாடாளுமன்றத்தில் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள்.
மக்கள் சார்பு காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்த பல திட்டங்கள் எல்லாம் கடந்த ஆறு மாதங்களில் இப்போதிருக்கும் அரசால் நீர்த்துப்போக வைக்கப்பட்டிருக்கின்றன".
இவ்வாறு அவர் பேசினார். மேலும், கேரளத்தில் உள்ள முக்கிய எதிர்க்கட்சியான சிபிஎம், தன் கட்சிக்குள்ளேயே இருக்கும் பூசல்களை நிவர்த்தி செய்ய முடியாமல் இருப்பதால், மாநிலத்தில் அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை காங்கிரஸ் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.