எங்களுக்கு நீதி கிடைக்க மோடி உதவுவாரா?- நிர்பயாவின் தந்தை கேள்வி

எங்களுக்கு நீதி கிடைக்க மோடி உதவுவாரா?- நிர்பயாவின் தந்தை கேள்வி
Updated on
1 min read

எங்களுக்கு நீதி கிடைக்க பிரதமர் நரேந்திர மோடி உதவுவாரா என நிர்பயாவின் தந்தை கேள்வி எழுப்பியுள்ளார்.

2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதியன்று தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கொடூரமாக தாக்கப்பட்ட அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

அந்தச் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்தோடிவிட்டது. இந்நிலையில், நிர்பயாவின் தந்தை அரசுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

அண்மையில், டெல்லியில் உபேர் கால் டாக்ஸியில் இளம் பெண் ஒருவர் ஓட்டுநரால் பலாத்காரம் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர்,

"என் மகள் பலாத்காரம் செய்யப்பட்டு பலியான சம்பவத்திற்குப் பிறகும்கூட இங்கு எதுவுமே மாறவில்லை. அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் தெரிவித்த வாக்குறுதிகளும், அறிக்கைகளும் பயனற்றவையாக உள்ளன. எங்கள் துயரத்தின் காரணமாக அவர்கள் அவ்வப்போது ஊடக வெளிச்சத்துக்கு வரமுடிந்தது. அவ்வளவே.

டிசம்பர் 16, 2012-க்குப் பின்னர் நான் ஒரே ஒரு நாள்கூட நிம்மதியாக தூங்கியதில்லை. நான் கண் மூடும்போதெல்லாம் என் மகள் கனவில் வருகிறாள். எனக்கு நீதி கிடைக்க என்ன செய்தீர்கள் என கேட்கிறாள். தன்னைப் போல் இன்னும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காவது நீதி கிடைக்கச் செய்யுங்கள் என கூறுகிறாள்.

அவளது கேள்விகளுக்கு என்னியம் பதில் இல்லாமல், செய்வதறியாமல் வழியில்லாமல் நிற்கிறேன். நரேந்திர மோடி, துணிச்சலானவர் எனக் கூறுகிறார்கள்.

எங்கள் மகளுக்கு நியாயம் கிடைக்க பிரதமர் மோடி உதவுவாரா? அவர் முடிவுகளை எடுப்பதில் வல்லவர் எனக் கூறுகிறார்கள். அப்படியானால்ம் எங்களுக்கு நீதி கிடைக்க வழி செய்வாரா?" இவ்வாறு நிர்பயாவின் தந்தை கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். மற்றொருவர் சிறார் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எஞ்சியவர்களில், அக்‌ஷய் தாகூர், வினய் சர்மா, முகேஷ் ஆகிய நால்வருக்கு தூக்கு தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது. தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனையடுத்து நால்வரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இத்தகைய சூழலில், நிர்பயாவின் தந்தை அரசுக்கு முன்வைக்கும் கேள்வி ஒன்று மட்டுமே. அது: "எல்லா சாட்சியங்களும் வலுவாக இருக்கும்போது, குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கு எது இடையூறாக இருக்கிறது. ஏன் அரசு தயங்குகிறது?" என்பது மட்டுமே.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in