Published : 17 Dec 2014 10:58 AM
Last Updated : 17 Dec 2014 10:58 AM

திருநள்ளாறு, குச்சனூர் கோயில்களில் சனிப் பெயர்ச்சி விழா கோலாகலம்

ஒன்பது கிரகங்களில் அதிக புகழைப் பெற்றவரும் ஈஸ்வர பட்டம் பெற்றவருமான சனீஸ்வர பகவான் நேற்று மதியம் 2.43-க்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக தான் இருந்துவந்த துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதனையொட்டி காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் லட்சக்கணக்கானோர் நளன் குளத்தில் நீராடி, சனிபகவானை வழிபட்டனர். சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு காரைக்கால் மாவட்டம் திருநள் ளாறில் சனி பகவானின் மூலவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங் காரம் செய்யப்பட்டு, சரியாக மதியம் 2.43-க்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சனீஸ்வர பகவானை வணங்கினர்.

சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கே தர்பாரண்யேஸ்வர் சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டது. சுவாமி, அம்பாள் ஆகியோருக்கும், தனி சன்னதியில் கருணை பொங்கும் கனிவோடு பக்தர்களைக் காத்துநிற்கும் சனிபகவானுக்கும் காலை முதலே சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

அதிகாலை 5 மணிக்கும், பகல் 11 மணிக்கும், பிற்பகல் 2 மணியளவிலும் நல்லெண்ணைய், தேன், திரவியப் பொடி, பழம், பஞ்சாமிர்தம் என முப்பதுக்கும் மேற்பட்ட திரவியங்களால் சனீஸ்வரனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டது. இடையில் சகஸ்ரநாம அர்ச்சனை உள்ளிட்ட ஆராதனைகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திக்கும், மூலவருக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது.

சனிப் பெயர்ச்சி விழாவில் தருமபுரம் ஆதீனம் ல சிவப்பிரகாச தேசிகர், திருநள்ளாறு கோயில் கட்டளை சுவாமிகள் கந்தசாமி தம்பிரான், புதுவை வேளாண்மைத்துறை அமைச்சர் சந்திரகாசு உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி மாநில காவல்துறை தலைவர் கண்ணன் ஜெகதீசன், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் சந்திரன், காரைக்கால் காவல் கண்காணிப்பாளர் பழனிவேல் ஆகியோர் தலைமையிலான புதுச்சேரி காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். காரைக்கால் மாவட்ட ஆட்சியரும் கோயில் தனி அதிகாரியுமான வல்லவன், கோயில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் உள்ளிட்ட கோயில் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை சிறப்புடன் செய்திருந்தார்கள்.

நேற்று வந்து வழிபட்டால் என்ன நன்மைகள் கிடைக்குமோ அது அத்தனையும் இன்னும் 15 நாட்களில் எப்போது திருநள்ளாறு வந்து வழிபட்டாலும் கிடைக்கும் என்பது நம்பிக்கை என்பதால் பக்தர்கள் நிதானமாக வந்து வழிபடலாம்.

குச்சனூரில் சனிப் பெயர்ச்சி விழா

தேனி மாவட்டம் குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் சனிப் பெயர்ச்சியையொட்டி பிற்பகல் 2.15 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 2.43 மணிக்கு தூலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு சனி பகவான் இடப்பெயர்ச்சி செய்ததால், மகாதீபம் ஏற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1.50 லட்சம் பக்தர்கள் குச்சனூர் வந்திருந்தனர்.

பக்தர்கள் ஏராளமானோர் சுரபி நதியில் நீராடி, தோஷங் களைக் கழிக்கும் நோக்கில் கொடி மரத்துக்கு உப்பு, பொரி தூவி, எள் தீபம் ஏற்றி வழிபட்டனர். சிலர், காகம் உருவம் பொறிக்கப்பட்ட பொம்மைகள் மற்றும் கருப்புத் துணிகளைக் காணிக்கையாக செலுத்தினர்.

பாதுகாப்புப் பணியில் ஏராள மான போலீஸார் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். வெளி மாவட்ட பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக பேருந்துகளும் இயக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x