

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாமில் சிகிச்சை செய்து கொண்டவர்களில் 14 பேருக்கு பார்வை முற்றிலும் பறிபோய் உள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாநில முதல்வர் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து குர்தாஸ்பூர் மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் அபினவ் ட்ரிக்கா கூறியதாவது:
தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் குமான் கிராமத்தில் கடந்த நவம்பர் 4-ம் தேதி கண் புரை அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் குர்தாஸ்பூர் மற்றும் அமிர்தசரஸ் மாவட்டங்களைச் சேர்ந்த 62 பேர் சிகிச்சை செய்துகொண்டனர்.
ஒரு மாதமாகியும் பிரச்சினை தீராததால் இவர்கள் அனைவரும் குர்தாஸ்பூர் மற்றும் அமிர்தசரஸ் நகரங்களில் உள்ள அரசு கண் மருத்துவமனைகளை அணுகி உள்ளனர். இதில் 14 பேருக்கு முற்றிலுமாக பார்வையிழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக, ஜலந்தரில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனையின் மருத்துவர் விவேக் அரோரா கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அபினவ் தெரிவித்தார்.
மேலும் இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்த மஞ்சித் சிங் என்பவரையும் கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அமிர்தசரஸ் மாவட்ட துணை ஆணையர் ரவி பகத் கூறும்போது, “இவர்கள் சிகிச்சை செய்துகொண்ட மருத்துவ முகாம், அரசின் அனுமதி பெறாமல் நடைபெற் றுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சிகிச்சையை மேற்கொண்ட குருநானக் அறக்கட்டளை மருத்துவமனை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
நோயாளிகளின் கண்ணை பரிசோதித்த அரசு மருத்துவர் ராஜீவ் பல்லா கூறும்போது, “முகாமில் சுகாதாரமற்ற முறையில் சிகிச்சை செய்துள்ளனர். இதனால் நோய்த் தொற்று பரவி பார்வையிழப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.
விசாரணைக்கு உத்தரவு
இந்த விவகாரம் தொடர்பாக, முகாம் நடைபெற்ற இடத்துக்கு நேரில் சென்று விரிவான விசாரணை நடத்துமாறு மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் வின்னி மகாஜனுக்கு மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் உத்தரவிட்டுள்ளார்.மேலும் பார்வை இழந்தவர்களின் குடும் பத்தினருக்கு இடைக்கால நிவார ணமாக தலா ரூ.1 லட்சம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் பரிசோதனை செய்து இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
இலவச முகாமில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 14 பேரின் பார்வை பறிபோனது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பஞ்சாப் மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளோம். மாநில அரசின் அறிக்கை கிடைக்கப் பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.