Last Updated : 06 Apr, 2014 11:08 AM

 

Published : 06 Apr 2014 11:08 AM
Last Updated : 06 Apr 2014 11:08 AM

தேவகவுடா கட்சியை விட்டு விலகிய திரை நட்சத்திரங்கள்!- களையிழந்தது கட்சியின் தேர்தல் பிரச்சாரம்

கர்நாடகத்தில் முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து திரைப்பட நட்சத்திரங்கள் பலர் விலகிவிட்டதால், அக்கட்சியின் பிரச்சாரம் களையிழந்து காணப்படுகிறது.

தேவ கவுடா‌ மகன் குமாரசாமி அரசியலில் மட்டுமன்றி திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டதால் ஆரம்ப காலம் முதலே அவர்களுக்கும் கன்னடத் திரையுலகிற்கும் நெருங்கிய உறவு ஏற்பட்டது. இதனால் கன்னடத் திரைவானில் மின்னிய அனந்த் நாக், அம்பரீஷ், மதன் பாட்டீல், பிரேம், குட்டி ராதிகா, மாளவிகா, பூஜாகாந்தி, ரக்ஷிதா ஆகிய திரை நட்சத்திரங்கள் ஒருவர் பின் ஒருவராக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இணைந்தனர்.

பல்வேறு கனவுகளுடன் இணைந்த இந்த திரை நட்சத்திரங்க ளில், தற்போது குட்டி ராதிகா மட்டுமே அங்கு நிலைத்திருக்கிறார். மற்றவர்கள் காங்கிரஸ் மற்றும் பாஜகவில் இணைந்துவிட்டனர்.

நடிகர் அனந்தநாக் திரைத் துறையை போலவே அரசியலிலும் வெற்றிகரமாக வலம் வந்தார். கர்நாடகத்தில் ஜனதா தளம் கட்சி ஆட்சியை பிடித்தபோது ஜே.எச்.பாட்டீல் தலைமையிலான அமைச்சரவையில் கலாச்சாரத் துறை அமைச்சராக இருந்தார்.

ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை தேவகவுடா ஆரம்பித்த போது அவருடன் இணைந்தார். பின்னாளில் தனக்கு முக்கியத்துவம் தரப்படாததால் தேவகவுடாவை விட்டு விலகினார்.

இதேபோல மாநிலம் முழுவதும் பரவலாக ரசிகர்களை கொண்ட நடிகர் அம்பரீஷ், தனது அரசியல் வாழ்க்கையை மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் தான் தொடங்கினார். எனினும் அவருக்கு உரிய இடத்தை கட்சி வழங்காததால் காங்கிரஸில் இணைந்தார்.

எம்எல்ஏ, எம்.பி. என பல்வேறு பதவிகளை வகித்த அம்பரீஷ் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருக்கிறார். இவர்களைப் போல நடிகர்கள் மதன் பாட்டீல், பிரேம், நடிகைகள் மாளவிகா, பூஜா காந்தி, ரக்ஷிதா ஆகியோர் தேவ கவுடா கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். மாளவிகாவுக்கு பாஜகவில் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவி தரப்பட்டுள்ளது.

பாஜகவில் இணைந்த நடிகர் - நடிகைகள் தற்போது மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேவ கவுடாவையும், குமாரசாமியையும் கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு போட்டியாகவும் பதிலடி தரவும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் நட்சத்திரங்கள் இல்லாத தால் அக்கட்சிப் பிரச்சாரம் களை யிழந்து காணப்படுகிறது.

நடிகை ரக்ஷிதாவிடம் கேட்ட போது, “அக்கட்சியில் தேவகவுடா, குமாரசாமியை தவிர வேறு யாருக்கும் முக்கியத்துவம் தருவதில்லை. திரையுலகினர் தீவிர அரசியலில் ஈடுபடுவதை அவர்கள் அனுமதிப்பதில்லை. மேலும் எங்களை அவர்கள் தங்களின் சுய‌லாபத் திற்காகவே பயன்படுத்துகின்றனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x