

சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தொடர்பு இருந்தால் அதுகுறித்து சிபிஐ விசாரிக்கும் என்று பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் மேற்குவங்க அமைச்சர் மதன் மித்ராவை சிபிஐ கைது செய்ததையடுத்து, “முடிந்தால் பிரதமர் என்னை கைது செய்யட்டும்” என மம்தா கூறியிருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லெகி கூறும்போது, “சாரதா நிதி நிறுவன மோசடியில் மம்தா பானர்ஜிக்கு தொடர்பு இருப்பதாகக் கருதினால் அவரிடம் விசாரிப்பது குறித்து சிபிஐதான் முடிவெடுக்கும். தன்னாட்சி பெற்ற சிபிஐ அமைப்புக்கு பாஜகவினர் யாரும் உத்தரவிட முடியாது” என்றார்.
பாஜகவின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்ம ராவ் கூறும்போது, “சாரதா நிதி நிறுவன ஊழல் தொடர்பான விளக்கத்தை மம்தா கூறவில்லை. இதன்மூலம் இந்த விவகாரத்தில் தனக்குள்ள தொடர்பும் வெளிச்சத்துக்கு வந்துவிடுமோ என்று அச்சப்படுகிறார்” என்றார்.
பாஜக தேசிய செயலாளர் சித்தார்த் நாத் சிங் கூறும்போது, “இந்த விவகாரத்தில் மம்தா பானர்ஜி தனது பயத்தை வெளிப்படுத்தி வருகிறார். சாரதா நிதி நிறுவன ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம்தான் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. ஊழலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விடுத்து, இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார்” என்றார்.
அமைச்சர் மதன் மித்ராவை சிபிஐ நேற்று முன்தினம் கைது செய்தது. இதற்கு பொறுப்பேற்று முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது.
ஆனால், “அமைச்சர் மதன் மித்ராவை கைது செய்தது சட்டவிரோதமானது. இது ஜனநாயக அமைப்புகளை அழிப் பதற்கான அபாயகரமான நடவடிக்கை. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” என பிரதமருக்கு மம்தா சவால் விடுத்தார்.