

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா உள்பட 8 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராஷர் முன்னிலையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த விசாரணை அதிகாரி, ஓரிரு தினங்களில் முக்கிய ஆவணங்களை சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை டிசம்பர் 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
மதுகோடா தவிர, ஜார்க்கண்ட் முன்னாள் தலைமைச் செயலாளர் அசோக் குமார் பாசு, நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா, இப்போது பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் வசந்த் குமார் பட்டாச்சார்யா, விபின் பிஹாரி சிங், வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் நிறுவன இயக்குநர் வைபவ் துல்சியான் மற்றும் விஜய் ஜோஷி ஆகியோரது பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன.
இவர்கள் அனைவர் மீதும் ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 120-பி (குற்ற சதி), 420 (மோசடி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, அரசுத் தரப்பு மூத்த வழக்கறிஞர் வி.கே. சர்மா நீதிமன்றத்தில் கூறும்போது, “குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள வசந்த் குமார் பட்டாச்சார்யா, விபின் பிஹாரி சிங் ஆகிய இருவரும் அரசுப் பணியில் உள்ளதால் அவர்களிடம் விசாரணை நடத்துவதற்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது. எனினும் அதற்கான ஆணை ஓரிரு நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்” என்றார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் லிமிடட் நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பரில் சிபிஐ வழக்கு தொடுத்தது. இதில் இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள், நிலக்கரி அமைச்சக அதிகாரி கள், ஜார்க்கண்ட் அரசு அதிகாரி கள் மற்றும் சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.