Last Updated : 18 Dec, 2014 10:50 AM

 

Published : 18 Dec 2014 10:50 AM
Last Updated : 18 Dec 2014 10:50 AM

கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்: தீந்தர் அஞ்சமின் அமைப்பினர் 24 பேருக்கும் ஆயுள் தண்டனை - 11 பேருக்கு தூக்கு ரத்தானது; கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2000-ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு ஹைதரா பாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட தீந்தர் அஞ்சுமன் என்ற அமைப்பு பொறுப் பேற்றது. அகண்ற இஸ்லாமிய தேசத்தை உருவாக்குவதற்காக இந்த தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்த‌து.

கர்நாடகத்தில் குல்பர்கா, ஹூப்ளி, பெங்களூரு ஆகிய இடங்களில் நடந்த‌ தாக்குதலில் 3 தேவாலயங்கள் பெரும் சேத மடைந்தன. இதை விசாரித்த தனிப் படை போலீஸார் 81 பேரை கைது செய்தனர்.

இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி வழங்கிய தீர்ப்பில், ‘11 பேருக்கு தூக்கு தண்டனையும், 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் மேலும் சிலருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்ட னையும் விதித்து உத்தரவிட்டது.

24 பேருக்கு ஆயுள் தண்டனை

தண்டனையை எதிர்த்து தீந்தர் அஞ்சுமன் அமைப்பை சேர்ந்தவர் கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்ற இவ் வழக்கின் விசாரணை கடந்த அக்டோபர் மாதம் நிறைவடைந்தது.நீதிமன்றத்திற்கு அச்சுறுத்தல் இருந்ததால் தீர்ப்பு வெளியாவதில் தாமதம் ஆனது. நீதிபதிகள் என்.குமார், ரத்னகலா ஆகியோர் நேற்று தீர்ப்பை அறிவித்தனர்.

அதில், ‘நாட்டுக்கு எதிராக போர்த்தொடுத்து அகன்ற இஸ்லாமிய தேசத்தை கட்டமைப் பதற்காக இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது நிரூ பிக்கப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 24 பேருக் கும் ஆயுள் தண்டனை விதிக்கப் படுகிறது. எனவே, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சையத் ஜியா அல் ஹூசேன் உள்ளிட்ட 11 பேருக்கு விதித்த தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுகிறது’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

கர்நாடக மாநிலம் குல்பர்காவை சேர்ந்தவர் ஹஸ்ரத் மௌலானா தீந்தர் சன்னபசவேஷ்வரா சித்திக். இஸ்லாமியரான இவர் இந்து மதத்தால் ஈர்க்கப்பட்டு பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட நூல்களை கற்றார். உருது மொழியில் உள்ள இஸ்லாமிய நூல்களை கன்னடத் தில் மொழிப்பெயர்த்துள்ளார். கடந்த 1924-ம் ஆண்டு இந்து மதத்தின் சில கொள்கைகளை உள்ளடக்கி 'தீந்தர் அஞ்சுமன்' என்ற அமைப்பை உருவாக்கினார்.

இந்தியாவில் அனைத்து மதங்களுக்கும் இஸ்லாமியமே தாய் மதம். ஆதலால் அனைத்து மதத்தினரும் இஸ்லாமியராக மாற வேண்டும். அதன் மூலம் அகன்ற இஸ்லாமிய தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்கையும் வகுத்தார். சித்திக் 1952-ம் ஆண்டு மறைந்ததை அடுத்து, அவரது மகன் சையத் ஜியா அல் ஹூசேன் இந்த அமைப்புக்கு தலைவர் ஆனார்.

1970-களில் பாகிஸ்தான் சென்ற அவர் அங்கு இஸ்லாமிய அமைப்புகளிடம் பயிற்சி பெற்று ஹைதராபாத் திரும்பினார். தீந்தர் அஞ்சுமன் அமைப்பின் இலக்கை நிறைவேற்றுவதற்காக 2000-ம் ஆண்டு தேவாலயங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார். இதனைத் தொடர்ந்து இந்த அமைப்பு தடை செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x