

டெல்லியில் மாநில அரசின் தடைக்குப் பிறகும் உபேர் கால் டாக்ஸி நிறுவனம் செயல்பட்டு வரும் நிலையில், தடையை செயல்படுத்தாததற்கு போக்கு வரத்து துறையும் போக்குவரத்து காவல் துறையும் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்துகின்றன.
டெல்லியில் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றிவரும் 27 வயது பெண் ஒருவர் கடந்த 5-ம் தேதி டாக்ஸி டிரைவர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக அந்த டிரைவர் பணியாற்றி வந்த உபேர் கால் டாக்ஸி நிறுவனம் உள்பட இணைய வழி கால் டாக்ஸி நிறுவனங்களுக்கு டெல்லி அரசு கடந்த திங்கள்கிழமை தடை விதித்தது.
இந்நிலையில் தடை விதிக்கப்பட்டு 3 நாள்களுக்குப் பிறகும் உபேர் கால் டாக்ஸி நிறுவனம் நேற்று செயல்பட்டது.
இதுகுறித்து டெல்லி போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “இணைய வழி செயல்பாடுகளை முடக்க போதுமான தொழில்நுட்ப வசதி எங்களிடம் இல்லை. எனவே தடையை செயல்படுத்துமாறு போக்குவரத்து காவல் துறைக்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம்” என்றார்.
இதற்கு போக்குவரத்து காவல் துறையினர் கூறும்போது, “தடை விதித்தவர்கள் தான் அதை செயல் படுத்த வேண்டும். போக்குவரத்து துறையில் இருந்து எங்களுக்கு கடிதம் எதுவும் வரவில்லை. இந்த உத்தரவை நாங்கள் செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளோம்” என்றனர்.