Last Updated : 19 Dec, 2014 02:55 PM

 

Published : 19 Dec 2014 02:55 PM
Last Updated : 19 Dec 2014 02:55 PM

பேய் ஜெயித்ததா?

தமிழ்த் திரையுலகைப் பேயும் பிசாசும் பிடித்து ஆட்டுகிறதோ என்னவோ தெரியவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் தியேட்டர்களில் பேய்கள் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. இரண்டு வருடங்களுக்கு முன்னால் வந்து வெற்றிபெற்ற பீட்சா படம், பேய்ப் படங்களுக்கும் திகில் படங்களுக்கும் சிவப்புக் கம்பளத்தை விரித்து கொடுத்தது. வெற்றி இயக்குநர்களான சுந்தர்.சி, மிஷ்கின் முதல் புதுமுக இயக்குநர்கள்வரை பலர் திகில் படங்களாக எடுத்துத் தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பேய்ப் படங்கள் ரசிகர்களின் தூக்கத்தைக் கலைக்க வந்தன. ஆனால், இந்தப் பேய்கள் ரசிகர்களைப் பயமுறுத்தினவா?

அரண்மனை, யாமிருக்க பயமே, ர, 1 பந்து 4 ரன் 1 விக்கெட் உள்படப் பல பேய்ப் படங்கள் இந்தாண்டு வெளிவந்துள்ளன. இந்த வாரம் பிசாசு படம் ரிலீசுக்காகக் காத்திருக்கிறது. இந்த ஆண்டும் மட்டும் பேயையும் திகிலையும் இணைத்துக் கொண்டு டிராவல் செய்த படங்கள் 25 சதவீதம் வந்திருப்பதாகத் திரையுலகில் கூறப்படுகிறது. இவற்றில் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றிப் படங்களாக அமைந்தன.

ஜகன் மோகினி தொடங்கி யார், பேபி இயக்கிய மைடியர் லிசா, 13-ம் நம்பர் வீடு போன்ற படங்களை இப்போது பார்த்தாலும் அடிவயிறு கலங்கும். இன்னொருவர் உடலில் ஆவி புகுந்து கொண்டு பழிவாங்கும் கதைகள்தான் இவை. இப்படிப் பேய் படங்கள் நிறைய வந்திருந்தாலும், இந்தப் படங்களில் அமைக்கப்பட்ட காட்சி அமைப்புகள் சிறந்த திகில் பட அந்தஸ்தை இப்படங்களுக்குப் பெற்றுத் தந்தன. இப்போதும் பயமுறுத்தும் பேய்ப் படங்கள் வரவே செய்கின்றன. ஆனால், இப்போது வரும் பேய்ப் படங்கள் ரசிகர்களைக் கவருகிறதா என்பது பெரும் கேள்விக்குறிதான். எல்லாவற்றிலும் வித்தியாசத்தை எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். இது பேய்ப் படங்களுக்கும் பொருந்தவே செய்கிறது.

தியேட்டரில் பேய்ப் படங்களைப் பார்க்கும்போது, ரசிகர்கள் ஒவ்வொருவரும் இயக்குநர்களாகி அடுத்த காட்சி இப்படித்தான் இருக்கும் என்று சுலபமாகக் கணித்துவிடுகிறார்கள். அடுத்தடுத்த காட்சிகளைக் கணிக்க முடியாமல் இருந்தால்தான் அது திகில். அப்படியில்லையென்றால் சலிப்புதான் மிச்சமாகும். இப்போது வந்துகொண்டிருக்கும் பல பேய் மற்றும் திகில் படங்கள் இந்தப் பாணியில்தான் இருக்கின்றன.

தொடர்ந்து ஒரே மாதிரியான திகில் படங்கள் வந்த வேளையில்தான் இரு ஆண்டுகளுக்கு முன்பு வித்தியாசமாக பீட்சா படம் வந்தது. கணிக்க முடியாத அளவுக்குத் திரைக்கதையும் கச்சிதமாக இருந்தது. திகிலும் திடீர் திருப்பங்களும் பீட்சா படத்தை வெற்றிப் படமாக மாற்றின. அதன்பிறகு தமிழ்த் திரையுலகில் பேய் படங்களும், திகில் படங்களும் வந்தவண்ணம் உள்ளன.

இந்த ஆண்டும் அப்படி வந்த படங்களில் அரண்மனை, யாமிருக்க பயமே ஆகியவை மட்டுமே வெற்றிப் படங்களாக அமைந்தன. சந்திரமுகியில் தொடக்கத்தில் காமெடியைத் தொட்டுவிட்டு இடையில் பயத்தை லேசாகக் காட்டிவிட்டு இறுதியில் திகிலில் உறைய வைத்திருப்பார்கள். அதே திரைக்கதை பாணிதான் கிட்டத்தட்ட இந்த இரு படங்களிலும் பின்பற்றப்பட்டிருந்தன. அதோடு கிளாமரான ஹீரோயின்களுக்கும் கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. வழக்கமான பாழடைந்த பங்களா, பழைய அரண்மனை, ஆவி, மர்மக் கொலைகள் எனக் கதை நகர்ந்தாலும், திகிலை காமெடியாக காட்டிய உத்திதான் இப்படங்களைக் கரைச் சேர்த்தன.

இப்படங்களைத் தவிர்த்து பிரபு யுவராஜ் இயக்கிய ‘ர’ என்ற படம் பேண்டசி வகை திகில் படமாக வெளி வந்தது. ஒரு வீட்டின் கதவுதான் இந்தப் படத்தில் பேய். 1 பந்து 4 ரன் 1 விக்கெட் என்ற படத்தை இயக்கிய புதுமுக இயக்குநர் வீரா, கிரிக்கெட்டிலிருந்து பேய் வருவதுபோல காட்டியிருந்தார். பேய் படங்களில் லாஜிக்குகள் பெரிதாகத் தேவையில்லையென்றாலும் சொல்லப்படும் விஷயம் கொஞ்சமாவது இயல்பாக இருக்க வேண்டும் என்றே ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

வெறுமனே கொடூர பேய் ஒப்பனை, கொலை செய்யும் பேய், அதை அடக்க மந்திர தந்திரம் என அரைத்த மாவையே அரைத்தால் பேய்ப் படங்கள் எப்படி ஜெயிக்கும்? பல பேய்ப் படங்கள் இந்த ஆண்டு வெளிவந்திருந்தாலும், இந்தப் பேய்கள் ரசிகர்களைப் பயமுறுத்தியது மாதிரி தெரியவில்லை.

பேய்ப் படங்களைத் தவிர்த்து க்ரைம் திகில் படங்களாக நீ நான் நிழல், தொட்டால் விடாது, தெகிடி, சரபம் ஆகிய படங்களும் ரசிர்களுக்கு த்ரில் அனுபவத்தைத் தந்தன. ஆனால், பீட்சாவின் சாயல் இப்படங்களில் இருந்ததால், பெரிய அளவில ரசிகர்களைக் கவர முடியவில்லை. பேய்ப் படங்களாக இருந்தாலும், அதிலும் தேவை வித்தியாசமான கதை பிளஸ் திரைக்கதையமைப்பு என்பதைப் புரிந்துகொள்ளாவிட்டால் நிஜப்பேயே வந்தாலும் ரசிகர்கள் அசரமாட்டார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x