

உத்தரப்பிரதேசத்தில் கடும் குளிர் காரணமாக 31 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் நேற்று கூறினர்.
உத்தரப்பிரதேசத்தில் கடும் குளிருடன் அடர்த்தியான பனி மூட்ட மும் காணப்படுகிறது. இதனால் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குளிர் காரணமாக வரும் 28-ம் தேதி வரை பள்ளிகளை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கடும் குளிருக்கு கடந்த திங்கள்கிழமை முதல் மாநிலம் முழுவதும் 31 பேர் பலியானதாக அதிகாரிகள் கூறினர்.
இதில் கிழக்கு உ.பி.யில் 8 பேர், அவாத் பகுதியில் 6 பேர், மீரட், கான்பூரில் தலா இருவர், மொராதா பாத்தில் 7 பேர், அலிகரில் 6 பேர் இறந்துள்ளனர். பனி மூட்டம் காரணமாக 150-க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை நிலவரப்படி குறைந்தபட்ச வெப்பநிலை லக்னோவில் 5 டிகிரி செல்சியஸ் ஆகவும், மீரட்டில் 2.3 டிகிரி, முசாபர் நகரில் 2.5 டிகிரி, வாரணாசியில் 3.5 டிகிரி ஆகவும் இருந்தது. வரும் நாட்களில் தொடர்ந்து குளிர் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில்…
தலைநகர் டெல்லியிலும் கடும் குளிர் மற்றும் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுகிறது. பனி மூட்டம் காரணமாக நேற்று ரயில்கள் வந்துசேர்வதும், புறப்பட்டுச் செல் வதும் தாமதம் ஆனது. இதனால் 60-க்கும் மேற்பட்ட ரயில் சேவை கள் தாமதம் ஆகின. டெல்லியில் கண்ணுக்கு புலப்படும் தூரம் நேற்று காலை 8.30 மணியளவில் 400 மீட்டர் ஆக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. டெல்லியில் திங்கள்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. இது கடந்த 5 ஆண்டுகளின் சராசரி (4.2) அளவை விட குறைவு.
ஒடிஸாவில்…
இதுபோல் ஒடிஸாவிலும் தொடர்ந்து கடும் குளிர் காற்று வீசி வருகிறது. இம்மாநிலத்தில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலையாக கந்தமால் மாவட்டத்தில் நேற்று 3.4 டிகிரி செல்சியஸ் பதிவானது.