

சுவிட்சர்லாந்து நிறுவனங்கள் இந்தியாவில் அதிக முதலீடு செய்து வருவதால் இரு நாடுகளுக்கிடையே நீண்டகாலமாக கிடப்பில் உள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எப்டிஏ) கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக, இந்தியா வுக்கான சுவிட்சர்லாந்து தூதர் லினஸ் வான் காஸ்டில்முர் மும்பையில் அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 2007-ம் ஆண்டு முதல் தடையற்ற வர்த் தக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வது குறித்து இரு நாடு களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் இறுதி முடிவு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என நம்புகிறேன்.
கடந்த ஏப்ரல் 2000 முதல் ஜூன் 2014 வரையிலான காலத்தில் ரூ.17 ஆயிரத்து 400 கோடியை சுவிட்சர்லாந்து நிறுவனங்கள் இந்தி யாவில் முதலீடு செய்துள்ளன. இதன்மூலம் இங்கு முதலீடு செய்துள்ள நாடுகள் பட்டியலில் 10-ம் இடத்தில் உள்ளோம்.
இந்தியாவில் செய்யப்படும் அந்நிய நேரடி முதலீட்டில் பெரும் பகுதி மற்ற நாடுகள் மூலம் மேற்கொள்ளப்படுவதால், சுவிட்சர் லாந்தின் உண்மையான முதலீடு இன்னும் அதிகமாக இருக்கும். 200-க்கும் மேற்பட்ட சுவிஸ் நிறுவ னங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.