

கர்நாடகத்தில் இந்து மடங்களை கட்டுப்படுத்தவும், அதிகாரத்தை வரையறுக்கவும் சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்த பாஜக முடுவு செய்துள்ளது.
கடந்த கர்நாடக சட்டபேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரில், மடங்கள் ஒழுங்கு சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ் மற்றும் மஜதா உறுப்பினர்கள் சிலரின் ஆதர வுடன் இந்த மசோதா நிறைவேறியது. பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு இந்து மடங்களை ஒடுக்க முயற்சி செய்வதாகவும், இந்த சட்டத்தை ஒருபோதும் அமல்படு்தத விட மாட்டோம் என்றும் பாஜக, சிவசேனா, ராம் சேனா, விஷ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மடாதிபதிகள் போராட வேண்டும்
கர்நாடகத்தின் மூத்த மடாதிபதி யான சிவகுமார சுவாமியை (107) எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், பிரஹலாத் ஜோஷி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் துமகூருவில் நேற்று சந்தித்தனர். அப்போது மாநில அரசின் சட்டத்திருத்தம், புதிதாக கொண்டுவர உத்தேசித்துள்ள சட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து எடியூரப்பா கூறும்போது, “மாநில காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இந்து மதத்தை ஒடுக்கும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளது. அதன் முதல் கட்டமாகவே இந்து மடங்களையும், மடாதிபதிகளையும் கட்டுப்படுத்தும் சட்டம் கொண்டுவருகிறது. இதில் மற்ற மதங்களின் மடங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் மடங்களின் சொத்துக் கணக்குகள், மடாதிபதிகளின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்து மடங்களை கட்டுப்படுத்தும் காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜக சார்பில் கர்நாடகம் மட்டுமில்லாமல் நாடு தழுவிய மாபெரும் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம். கட்சியின் மேலிட தலைவர்களிடம் பேசிவிட்டு அதற்கான தேதியை அறிவிப்போம். கர்நாடக மக்களின் ஆதரவுடன் வரும் ஜனவரி மாதம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்''என்றார்.