கர்நாடகத்தில் ரூ.117 கோடி செலவில் சாதி வாரி கணக்கெடுப்பு
கர்நாடக மாநிலத்தில் இன்னும் 10 நாட்களில் சாதி வாரிக் கணக்கெடுப்பு தொடங்கப்பட இருக்கிறது. இரண்டு மாதங்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பில் மாநிலம் முழுவதும் 1.25 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட இருப்பதாக அம்மாநில சமூக நலத் துறை அமைச்சர் ஹெச்.ஆஞ்சநேயா தெரிவித்தார்.
இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெலகாவியில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: கர்நாடக மக்களின் சமூக,பொருளாதார நிலையை அறிவதற்காக 1931-ம் ஆண்டு சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு கர்நாடகத்தில் சாதிவாரியாக மக்களின் கல்வி, சமூக நிலை, பொருளாதார சூழல் ஆகியவை குறித்து விரிவான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எனவே இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இன்னும் 10 நாட்களில் தொடங்கும் சாதிவாரி கணக்கெடுப்பு மார்ச் மாதத்துக்குள் முடிவடையும். இந்த கணக்கெடுப்புக்காக ரூ.117 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் சமூக நீதியை நிலைநாட்டுவதற்காகவே சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதில் அரசு உறுதியாக இருக்கிறது. இதன் மூலம் தலித், பழங்குடியினருக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும் என்றார்.
