

அடுத்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டின்போது பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
கடந்த ஜூன் மாதத்தில் அனைத்து வகுப்பு ரயில் கட்டணமும் உயர்த்தப்பட்டது. அதன்படி பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும் சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் அதிகரித்தது.
இதைத் தொடர்ந்து கடந்த ஜூலையில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது எரிபொருள் விலைக்கு ஏற்ப 6 மாதங்களுக்கு ஒருமுறை ரயில் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பின்படி வரும் டிசம்பரில் ரயில் கட்டணம் உயர்த்தப்படக்கூடும் என்று ரயில்வே வட்டாரங்கள் கூறி வந்தன. தற்போது அடுத்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டின்போது பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த சில மாதங்களில் எரிபொருள் விலை 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதற்கேற்ப ரயில் கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, ரயில்வேயின் சுமையை பயணிகள் பகிர்ந்து கொள்ள வேண்டும், ரயில்வே துறையின் நிதி ஆதாரம் பெருகினால்தான் நிலுவையில் உள்ள திட்டங்கள், புதிய திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.
தற்போதைய நிலவரப்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற ரூ.6 லட்சம் கோடி முதல் ரூ.8 லட்சம் கோடி வரை தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் புல்லட் ரயில்களையும் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே நிதி ஆதாரத்தைப் பெருக்க பயணிகள் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரயில்வே துறையின் வருமானத்தை ஒரு ரூபாயில் கணக்கிட்டால் 94 பைசா ரயில்வே நிர்வாகத்தை நடத்த செலவிடப்படுகிறது. 6 பைசா மட்டுமே மிச்சமாகிறது. அந்த தொகையை கொண்டே புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று கடந்த ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.