

இலங்கை அதிபர் ராஜபக்ச தனது மகன்களான ஹோஹிதா ராஜபக்ச, ரோஹிதா ராஜபக்ச ஆகியோருடன் நேற்று முன் தினம் தனி விமானத்தில் ரேணி குண்டா விமான நிலையத்துக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புகளுக் கிடையே திருமலைக்கு சென்றார். இரவு திருமலையில் தங்கினார்.
நேற்று அதிகாலை 2.30 மணி யளவில் ராஜபக்ச மற்றும் அவரது மகன்கள் சுப்ரபாத சேவையில் பங்கேற்று ஏழுமலையானை தரிசித்தனர். இவர் களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகளை செய்து, தீர்த்த பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர். பின்னர் ராஜபக்ச, தனி விமானம் மூலம் இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றார்.
ராஜபக்ச வருகையையொட்டி, நேற்று முன்தினம் முதல் அவர் செல்லும் வழியில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டன. நேற்று அதிகாலை அங்கப்பிரதட்சனம் ரத்து செய்யப்பட்டது. ராஜபக்ச தரிசனம் முடிந்து திருப்பதிக்கு மலைவழிப்பாதை வழியாக செல்வதற்கு 2 மணி நேரம் முன்னதாகவே மற்ற வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
திருமலையில் ஆர்ப்பாட்டம்
ராஜபக்ச நேற்று அதிகாலை சுவாமி தரிசனத்துக்கு சென்றபோது ‘லேபாட்சி சர்கிள்’ அருகே விடுதலை சிறுத்தைகள், மதிமுக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை திருமலை போலீஸார் கைது செய்தனர். இதேபோன்று திருமலையில் உள்ள சப்தகிரி விடுதி அருகே சிலர் ராஜபக்சவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அங்கு தமிழ் ஊடக செய்தியாளர்களும் இருந்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்களை போலீ ஸார் கைது செய்தபோது, சில செய்தியாளர்களின் கேமராக்கள் உடைந்தன. செய்தியாளர்களுக் கும் காயம் ஏற்பட்டது. இதனால் தமிழக செய்தியாளர்கள் போலீ ஸாரை கண்டித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களையும் திருமலை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று பின்னர் விடுவித்தனர்.
திருப்பதி எஸ்.பி. விளக்கம்
இதுகுறித்து திருப்பதி எஸ்.பி. கோபிநாத் ஜெட்டியிடம் விசாரித்த போது, “தமிழக செய்தியாளர்கள் மீது போலீஸார் யாரும் தாக்குதல் நடத்தவில்லை. எந்த செய்தியாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யவில்லை” என்றார்.