

மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதியின் சர்ச்சை பேச்சு தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் மூன்றாவது நாளாக நேற்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
மக்களவையில் கேள்வி நேரம் முதல் பூஜ்ஜிய நேரம் வரை தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணை அமைச்சர் சாத்வியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோஷமிட்டபடி இருந்தனர். கூச்சல் குழப்பத்துக்கு நடுவே சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் மக்களவையை நடத்தினார்.
சாத்வியின் சர்ச்சை பேச்சு குறித்து மக்களவையில் கார்கே பேசும்போது, “பிரதமர் என்பவர் அனைவருக்கும் தலைவர். அவர்தான் அமைச்சர்களை வழி நடத்துகிறார். எனவே, அமைச்சரின் சர்ச்சை பேச்சு குறித்து பிரதமரின் பதிலை எதிர்க்கட்சிகள் அனைவரும் கோரினோம். அவர் பதில் அளிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவது ஜனநாயகம் ஆகாது. இது மிகவும் ஆபத்தானது” என்றார்.
இதற்கு பதில் விளக்கம் அளிக்கும் வகையில் பேசிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், “நான் உங்களது கோரிக்கையை மட்டும் பார்க்க முடியாது. அவையில் உள்ள மற்ற உறுப்பினர்கள் பங்குபெற விரும்பும் கேள்வி மற்றும் மற்ற நடவடிக்கைகளுக்கும் வாய்ப்பளிக்க வேண்டி உள்ளது. அவையில் உறுப்பினர்கள் எழுப்ப விரும்பும் எந்தப் பிரச்சினைக்கும் வாய்ப்பளிக்க மறுத்ததில்லை” என்றார்.
இதையடுத்து, திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் சுதீப் பந்தோபாத்யாயா, தங்களது கட்சியின் உறுப்பினர் தபஸ்பாலை குறிப்பிட்டு மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கூறிய கருத்துக்கு பதில் அளிக்க வேண்டும் என கேட்டார். இந்தப் பிரச்சினை முடிந்து விட்டதால் எந்த விளக்கமும் தேவையில்லை என சபாநாயகர் கூறவே, கட்சி உறுப்பினர்களுடன் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார் சுதீப்.
சாத்வியை பதவி நீக்க மறுத்ததையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
மாநிலங்களவையில்
மாநிலங்களவை நேற்று காலை யில் தொடங்கியதும் சாத்வியின் சர்ச்சைக்குரிய பேச்சைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவையின் செயல்பாடுகளை முடக்கும் வகையில், அவைத் தலைவரின் இருக்கைக்கு முன்பு அவர்கள் சூழ்ந்துகொண்டு கோஷமிட்டனர்.
அவைக்கு தலைமை தாங்கிய மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் பலமுறை கேட்டுக் கொண்ட பின்பும் அவர்கள் அமளி தொடர்ந்தது. இதனால், வேறு வழியின்றி இரண்டுமுறை 15 நிமிடங்களுக்காக அவையை ஒத்தி வைத்தார்.
மன்னித்து விடுங்கள்
பிறகு அவை மீண்டும் கூடியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
பாஜக நாடாளுமன்ற எம்.பி.க் கள் கூட்டத்தின்போது, இணை அமைச்சரின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து எனக்கு தெரிவிக்கப்பட்டது. இவரது பேச்சு ஏற்கத்தக்கதல்ல எனக் கூறி, அதுபோன்ற மொழிகளில் பேசுவதை உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.
இதையடுத்து சம்மந்தப்பட்ட அமைச்சர் அவையிலேயே மன்னிப்பு கோரி விட்டார். ஜோதி முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகி, அமைச்சர் பொறுப்பை ஏற்றவர். இதைக் கருத்தில் கொண்டு பெருந்தன்மை யுடன் உறுப்பினர்கள் அவரது மன்னிப்பை ஏற்று பிரச்சினையை முடித்துக் கொள்ள வேண்டும். நாட்டின் நலனை மனதில் கொண்டு அவையின் பணிகளை வழக்கம்போல் செயல்பட அனுமதிக்க வேண்டும் என மோடி தெரிவித்தார்.
பிரதமரின் பதிலை ஏற்றுக்கொள்ளாத எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ‘அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று தொடர்ந்து கோஷமிட்டனர். கடும் அமளிக்கு நடுவே எதிர்கட்சி துணைத் தலைவர் ஆனந்த் சர்மா கூறும்போது, “நமது அரசியலமைப்பு சட்டத்தில் இதுபோன்ற சர்ச்சை பேச்சுகளுக்கு இடமில்லை. எனவே, த அமைச்சரை பிரதமர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறும்போது, “இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கோரியபடி பிரதமர் அவைக்கு வந்து பதிலளித்து விட்டதால், அவையை சுமுகமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை தலைவர் சீதாராம் யெச்சூரி கூறும்போது, “ஒரு உறுப்பினர் தவறு செய்யும்போதுதான் மன்னிப்பு கேட்பார். எனவே, மன்னிப்பு கேட்டதன் மூலம் சாத்வி தவறு செய்துள்ளார். தவறு செய்தவர் எப்படி பதவியில் நீடிக்க முடியும். எனவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.
ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் கூறும்போது, “அமைச்சர் இதுபோல் பேசுவது முதன் முறையல்ல. ஏற்கனவே அவர் பல்வேறு முறை மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் பேசியுள்ளார்” என்றார்.
இதற்குப் பிறகும் கூச்சல் குழப்பம் நிலவியதால் மாநிலங்களவை தலைவர் ஹாமீது அன்சாரி மதியம் இரண்டு மணி வரை அவையை ஒத்தி வைத்தார். அவை மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்ததால் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் 30 நிமிடங்களுக்கு அவையை ஒத்தி வைத்தார்.