

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவிற்கு அளிக்கப்பட்ட அரசு நிலங்களின் விவரங்களை ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் முக்கிய விவகாரங்கள் குறித்து நரேந்திர மோடி பேசி வருகிறார். ஆனால், நாட்டின் மிக முக்கியமான பிரச்சினைகளான பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல் ஆகியவை பற்றி காங்கிரஸ் எதுவுமே பேசவில்லை. அதே சமயம், மோடி மீது பொய் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
ராபர்ட் வதேரா அரசிடம் வாங்கிய நிலங்களின் விலை விவரங்களை ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும். இந்த நிலங்கள் ராபர்ட்டிற்கு எதன் அடிப்படையில் ஒதுக்கப்பட்டது என்பதை தெரிவிக்க வேண்டும். குறிப்பாக குடியரசுத் தலைவர் மாளிகைக்கு எதிரே உள்ள மிகப்பெரிய நிலத்தை ராபர்ட்டிற்கு தொடர்புடைய நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதற்கான காரணத் தைத் தெரிவிக்க வேண்டும். தகுதி யற்ற நிறுவனங்களுக்கு 2ஜி அலைக் கற்றை உரிமம் மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டது ஏன் என்பது பற்றி காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும்.
குஜராத்தில் மலிவான விலையில் தொழிலதிபர்களுக்கு நிலம் ஒதுக்கப் பட்டிருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்த குற்றச்சாட்டில் உண்மை யில்லை. மற்றவர்கள் மீது குறை கூறுவதற்கு முன்பு அவர் பலமுறை யோசிக்க வேண்டும்” என்றார்.