

பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு வழங்கப்பட்டு வரும் பரோல் (சிறை விடுப்புக்காலம்) குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த விஷயத்தில் சட்டம் மீறப்பட்டுள்ளதா என மகாராஷ்டிர அரசு விசாரணை மேற்கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
1993ம் ஆண்டு நிகழ்ந்த மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்பிருப்பதாக நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார்.
சட்டத்துக்குப் புறம்பாக ஏ.கே.56 ரக துப்பாக்கியை வைத்திருந் ததும், குண்டு வெடிப்புச் சம்ப வத்தின்போது அதனை எரித்து விட்டதற்காகவும் கைது செய்யப் பட்ட இவருக்கு ஐந்து ஆண்டு காலச் சிறைத்தண்டனை விதிக் கப்பட்டது.
சிறையில் இருக்கும் இவருக்கு அவ்வப்போது பரோல் வழங்கப்பட்டு வந்தது. சிறையில் உள்ள மற்றவர்களுக்கு பரோல் வழங்காமல் இவருக்கு மட்டும் தொடர்ந்து பரோல் வழங்கப்பட்டு வந்தது.
2013ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தனது உடல்நிலையைக் காரணமாகக் கூறி 28 நாட்களும், டிசம்பர் மாதத்தில் தனது மனைவியின் உடல்நிலையைக் காரணமாகக் கூறி 28 நாட்களும் பரோல் கோரினார். அதன்படி, அவருக்கு பரோல் வழங்கப்பட்டது.
ஆனால் பரோல் சமயத்தில், உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்று கூறப்பட்ட அவரது மனைவி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட புகைப்படம் வெளியானது. இதைத் தொடர்ந்து சஞ்சய் தத்துக்கு வழங்கப்பட்ட பரோல் குறித்து சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு 14 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளதால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ராம் ஷிண்டே பி.டி.ஐ. செய்தியாளரிடம் கூறும்போது, "ஏற்கெனவே நான்கு அல்லது ஐந்து பேர் பரோலுக்கு விண்ணப்பதிருந்தார்கள் எனவும், ஆனால் அவர்களுக்கு பரோல் வழங்காமல் சஞ்சய் தத்துக்கு மட்டும் வழங்கியிருப்பதாகவும் நான் கேள்விப்பட்டேன்.
எந்த சட்டத்தின் கீழ் இவ்வாறு அவருக்கு மட்டும் சிறப்பு பரோல் வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்க வேண்டும். இவருக்கு மட்டும் அனுமதி வழங்கி மற்றவர்களுக்கு பரோல் உரிமை மறுக்கப்பட்டிருக்கக் கூடாது. சட்டம் அனைவருக்கும் சமமானது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்" என்றார்.