

கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டான `கம்பளா' (எருமை ஓட்டப் பந்தயம்) போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதனை கம்பளா விளையாட்டு போட்டி அமைப்பாளர்களும், துளு இனத்தவர்களும் இனிப்பு வழங்கி மங்களூருவில் உற்சாகமாக கொண்டாடினர்.
கடலோர மாவட்டங்களான மங்களூரு, உடுப்பி ஆகிய பகுதிகளில் அதிகளவில் வசிக்கும் துளு மொழி பேசும் மக்கள், தங்களது குல தெய்வங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கம்பளா விளையாட்டுப் போட்டியை ஆண்டுதோறும் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை நடத்துகின்றனர்.
இந்த போட்டியின்போது உழுத நிலையில் உள்ள வயலில் ஆண் எருமைகளை ஏரில் பூட்டி வீரர்கள் வேகமாக விரட்டுவார்கள். எருமைகள் சீறிப் பாய்ந்து வருவதை வயலைச் சுற்றிலும் நின்று பார்வையாளர்கள் ரசிப்பார்கள்.
மிருக வதை தடுப்பு சட்டம்
இந்நிலையில், மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு ஆகிய விளையாட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என மேனகா காந்தி தலைமையிலான விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளுக்கு தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து கம்பளா போட்டிக்கும் மங்களூரு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதைக் கண்டித்து கடந்த இரு மாதங்களாக துளு மக்கள் அமைப்புகள் மங்களூருவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வதைக்காமல் நடத்துங்கள்
அகில பாரத துளு மக்கள் கூட்டமைப்பு சார்பாக, “கம்பளா போட்டி நடத்த அனுமதி வழங்கு மாறு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, “கம்பளா போட்டியில் எருமைகள் வதைக்கப்படவில்லை. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை இதற்கு பொருந்தாது.
1000 ஆண்டுகள் பழமையான இந்த விளையாட்டை தடை செய்தால் துளு மக்களின் பாரம்பரியமும், கலாச்சாரமும் நாளடைவில் அழிய வாய்ப்புள்ளது. எருமைகளை குல தெய்வங்களின் வாகனமாகக் கருதும் துளு மக்கள் ஒருபோதும் அதனை துன்புறுத்த மாட்டார்கள்” என வாதிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி அப்துல் நசீர், “கம்பளா போட்டிக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்படுகிறது. அதே நேரத்தில் போட்டியின்போது எருமைகளை துன்புறுத்தக் கூடாது. அவற்றிற்கு உரிய முறையில் உணவு, பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒவ்வொரு போட்டியையும் வீடியோ பதிவு செய்து மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க வேண்டும். கம்பளா போட்டியின்போது வட்டாட்சியர் சம்பவ இடத்துக்குச் சென்று கண்காணிக்க வேண்டும். இந்த தீர்ப்பு ஜல்லிக்கட்டு உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது” என பல நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்தார்.
துளு மக்கள் உற்சாகம்
இதையடுத்து, மங்களூருவைச் சுற்றியுள்ள பகுதிகளில் கம்பளா போட்டி ஏற்பாட்டாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பல கிராமங்களில் துளு மக்கள் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக துள்ளி குதித்தனர்.
இதுதொடர்பாக அகில பாரத துளு மக்கள் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான குணபால் கடம்பா, ‘தி இந்து’விடம் கூறும்போது, “கர்நாடகத்தில் எந்த அங்கீகாரமும் இல்லாமல் வாழும் துளு மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது. இதற்காக நீதிமன்றத்துக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். வரும் 21-ம் தேதி மங்களூருவை அடுத்துள்ள சுள்ளியாவில் கம்பளா போட்டியை பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறோம். அதனைத் தொடர்ந்து பல இடங்களில் போட்டிகள் நடைபெறும்” என தெரிவித்தார்.