Last Updated : 15 Dec, 2014 11:26 AM

 

Published : 15 Dec 2014 11:26 AM
Last Updated : 15 Dec 2014 11:26 AM

கோயிலில் எச்சில் இலை மீது உருளும் சடங்கு நடத்த உச்ச நீதிமன்றம் தடை: பல்வேறு முற்போக்கு அமைப்புகள் வரவேற்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள இந்து கோயில்களில் நடத்தப்படும் எச்சில் இலைமீது உருளும் சடங்குக்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. இதை பல்வேறு அமைப்புகள் வரவேற்றுள்ளன.

கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாக க‌ர்நாடகத்தில் உள்ள இந்து கோயில்களில் ஆண்டுதோறும் 'உருளு சேவை' அல்லது 'மடே ஸ்நானம்' என்ற சடங்கு நடைபெற்று வருகிறது. இதன்படி கோவிலில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகள் மீது இதர‌ சாதியினர் உடைகளை கழற்றிவிட்டு உருள வேண்டும். இதனால் தங்கள் பாவங்கள், பிரச்சினைகள், நோய்கள் தீரும் என நம்பப்படுகிறது.

குறிப்பாக, கர்நாடக மாநிலம் மங்களூரு மாவட்டத்தில் உள்ள குக்கே சுப்ரமண்யா கோயிலில் ஆண்டுதோறும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 'உருளு சேவை' 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எச்சில் இலை மீது உருள்வார்கள். இதனைத் தொடர்ந்து மாநிலத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் இந்த 'உருளு சேவை' சடங்கு நடைபெறுகிறது.

பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு

இத்தகைய மூடநம்பிக்கை தொடர அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி தலித், பழங்குடியினர், பல்வேறு பிற்படுத்தப்பட்ட சாதிய‌ அமைப்புகளும், கம்யூனிஸ்ட் கட்சியினரும், பல முற்போக்கு மடாதிபதிகளும் உண்ணா விரதம் இருந்தனர். ஆனாலும் கர்நாடக உயர் நீதிமன்றம் அனுமதியளித்ததால், இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில் 1000-க்கும் உருளு சேவையில் ஈடுபட்ட‌னர்.

உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கர்நாடக தலித் மற்றும் பழங்குடியினர் கூட்டமைப்பினர் 'உருளு சேவைக்கு' தடை விதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதிகள் மதன் பி.லோகூர் மற்றும் பானுமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கோயில் நிர்வாகம் சார்பில், “500 ஆண்டுகளுக்கும் மேலாக உருளு சேவை நடந்து வருகிறது. இந்த சடங்கில் பங்கேற்றால் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறுகிறது. அவர்களின் உடலில் உள்ள நோய்களும் குணமாகிறது. இந்த சடங்குக்கு ஏற்கெனவே உச்ச நீதிமன்றமும், கர்நாடக உயர் நீதிமன்றமும் அனுமதி அளித்திருக்கிறது” என வாதிடப்பட்டது.

தலித் மற்றும் பழங்குடியினர் கூட்டமைப்பினர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.அந்தியர்ஜுனா, “உருளு சேவை மனித உரிமைக்கு எதிரானது. 21-ம் நூற்றாண்டிலும் சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் மனிதத் தன்மையற்ற மூட நம்பிக்கைகள் தொடரக்கூடாது” என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோகூர், பானுமதி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

உருளு சேவை 500 ஆண்டு காலமாக நடக்கும் வழக்கமான பிரார்த்தனை முறை என்பதை ஏற்க முடியாது. மிக பழமையான சடங்கு என்பதால் கண்மூடித்தனமாக எதையும் ஏற்க முடியாது. தீண்டாமை கூட பழங்கால வழக்கம்தான். அதை அனுமதிக்க முடியுமா?

ஒரு தரப்பினர் உண்ட‌ எச்சில் இலை மீது இன்னொரு தரப்பினர் உருளும் சடங்கை அனுமதிக்க முடியாது. எனவே கர்நாடக உயர் நீதிமன்றம் உருளு சேவைக்கு அனுமதி அளித்து வெளியிட்ட தீர்ப்புக்கு தடை விதிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

முற்போக்கு அமைப்புகள் வரவேற்பு

உருளு சேவைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பல்வேறு முற்போக்கு அமைப்பினரும், பிற்படுத்தப்பட்ட சாதிய அமைப்பினரும், முற்போக்கு மடாதிபதிகளும் வரவேற்றுள்ளனர். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய எளிய மக்களுக்குக் கிடைத்த பெரிய‌ வெற்றி இது என கன்னட எழுத்தாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

உருளு சேவைக்கு எதிராக நீண்டகாலமாக போராடிவரும் தலித் செயற்பாட்டாளர் மாவள்ளி சங்கர், ‘தி இந்து’விடம் பேசும்போது, “இந்த அறிவற்ற சடங்குக்கு எதிராக போராடி ரத்தம் சிந்திய அனைவருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. இதை சாதி, மத, மூட நம்பிக்கைக்கு எதிராக விழுந்த மாபெரும் அடியாக பார்க்கிறேன். இனி வரும் காலங்களில் உருளு சேவை போன்ற மூடநம்பிக்கை எங்கும் நடக்காதவாறு கர்நாடக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x