

பிஹார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து பெண்கள் ஜீன்ஸ் அணியவும் செல்போன் பயன்படுத் தவும் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து அந்த மாவட்டத் துக்குட்பட்ட ஹதுவா வட்டார வளர்ச்சி அதிகாரி ஜிதேந்திர குமார் கூறியதாவது:
சிங்கா கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் வினய் குமார் ஸ்ரீவாஸ்தவ் மற்றும் அரசு அதிகாரி கிருஷ்ணா சவுத்ரி ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத் தில், பெண்கள் ஜீன்ஸ் அணியவும் செல்போன் பயன்படுத்தவும் தடை விதிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி இந்த உத்தரவு கிராம எல்லைக்குட்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து சவுத்ரி கூறும் போது, “பெண்கள் ஜீன்ஸ் அணிவ தாலும், செல்போன் பயன்படுத்து வதாலும், அவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன. அதைத் தடுக்கவே இவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது.
பெண்களுக்காக ஜீன்ஸ் மற்றும் செல்போன்களை வாங்கிக் கொடுக்க வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு ஏற்கெனவே கோரிக்கை வைத்துள்ளோம்.
அவர்களது ஒத்துழைப்புடன் இதை அமல்படுத்துவோம். யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம். தடையை மீறு வோருக்கு அபராதம் விதிக்கவோ தண்டனை வழங்கவோ மாட் டோம்” என்றார்.