

ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள்சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பெங்களூரு இளைஞரைக் கைது செய்ததால் ஆத்திரமடைந்த ஐஎஸ் அமைப்பினர், விரைவில் பழிவாங்குவோம் என ட்விட்டர் மூலம் பெங்களூரு காவல்துறைக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் (24) ட்விட்டர் இணையதளம் மூலம் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த 'சேனல் 4' தொலைக்காட்சி தக்க ஆதாரங்களுடன் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் எம்.என். ரெட்டி தலைமையிலான தனிப்படையினர், மத்திய, மாநில உளவுத்துறை போலீஸாரும் இணைந்து விசாரணை நடத்தி, மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸைக் கைது செய்தனர்.
பகலில் வேலைக்கு செல்லும் மேக்தி, இரவு நேரத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக ட்விட்டர் பக்கத்தில் தீவிரமாக செயல்பட்டுள்ளார். 'ஷமி விட்நஸ்' (@shamiwitness) என்ற ட்விட்டர் பக்கத்தை நிர்வகித்து அதில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தொடர்பான செய்திகளை வெளியிட்டுள்ளார்.
ஐஎஸ் அமைப்பு குறித்து அரபு மொழியில் வெளியாகும் செய்தியை உடனுக்குடன் மொழிமாற்றம் செய்து ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தை 17,700 பேர் பின்தொடர்ந்துள்ளனர். இவர்களில் 3-ல் 2 பங்கு பேர் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள்.
மிரட்டல்:
இதனிடையே, மேக்தியைக் கைது செய்ததற்காக, பெங்களூரு போலீஸாருக்கு ஐஎஸ் அமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
பெங்களூரு காவல்துறை துணை ஆணையர் அபிஷேக் கோயலின் ட்விட்டர் பக்கத்தில் இந்த மிரட்டல் விடப்பட்டுள்ளது. @abouanfal6 என்ற பெயரிலான ட்விட்டர் கணக்கிலிருந்து, துணை ஆணையரின் ட்விட்டருக்கு மிரட்டல் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
“எங்கள் சகோதரர்களை உங்களிடம் விட்டுவைக்க மாட்டோம். பழிக்குப் பழி வாங்கும் செயல் விரைவில் வந்து கொண்டிருக்கிறது. எங்களின் பதிலடிக்காக காத்திருங்கள்” என அந்த மிரட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து துணை ஆணையர் கோயல் கூறும்போது, “இந்த மிரட்டலை நான் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. பெரிய எச்சரிக்கை ஏதுமின்றி அதைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறேன்” என்றார்.
5 நாள் காவல்
கைது செய்யப்பட்ட மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க குற்றவியல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.