

உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ஆசம்கானின் தொலைந்துபோன எருமையை கண்டுபிடித்த அம் மாநில போலீஸார், இப்போது சமாஜ்வாதி கட்சி பொதுச் செயலாளரின் வீட்டுப் பூனையை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
உ.பி.யின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நகரங்களில் ஒன்றான பரேலியில் வசிப்பவர் ஷுபா ராய். ஆளும் சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளர் ரேவதி ரமன்சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரியான இவரது வீட்டு செல்லப் பூனை சமீபத்தில் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
தனது பூனை காணாமல் போய்விட்டதாக பரேலி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ரேவதி. ஆனால் இதுகுறித்து புகார் பதிவு செய்ய அவர்கள் மறுத்துள்ளனர். பிறகு உ.பி. மாநில காவல் துறை தலைமை இயக்குநரின் உத்தரவு வந்த பிறகு வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் ராய் போனில் கூறும்போது, “கடந்த 3 வருடங்களுக்கு முன்பு எனது வீட்டில் ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது.
இதை திருடியவர்களின் பெயருடன் புகார் செய்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது அதே நபர்கள் என் வீட்டுப் பூனையை திருடி உள்ளனர்.
இதுகுறித்து வேறு வழியின்றி எனது மனைவி டிஜிபியிடம் புகார் செய்த பிறகு தேடுதல் நடந்து வருகிறது.
கடந்த 3 வருடங்களாக வளர்த்து வரும் அந்த பூனை எனது மனைவிக்கு மிகவும் செல்லமானது. பணம் கிடைக்காவிட்டாலும், பூனையை மட்டும் கண்டுபிடிக்கும்படி கோரியுள்ளோம். திருட்டு போனது பூனையாக இருந்தாலும் அதைக் கண்டுபிடிக்க வேண்டியது போலீஸாரின் கடமை” என்றார்.
2012-13-ம் ஆண்டுக்கான தேசிய குற்றவியல் பதிவேட்டில் உள்ள புள்ளிவிவரத்தின்படி உ.பி. மாநிலத்தில் கொடூரமான குற்றங்கள் எண்ணிக்கை 33,824. இது பிஹார் மற்றும் மகராஷ்டிராவைவிட அதிகம்.
கொலை, கொள்ளை உள்ளிட்ட கிரிமினல் குற்றங்களுக்கு பெயர் போனது உபியின் மேற்குப் பகுதி. இதன் அருகிலுள்ள ராம்பூரில் கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆசம் கானின் பண்ணை வீட்டிலிருந்து ஏழு எருமைகள் காணாமல் போயின. அவை அமைச்சருடையது என்பதால் மோப்ப நாய்களுடன் தனிப்படை அமைக்கப்பட்டு ஒரே வாரத்தில் எருமைகள் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.