

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்து டெல்லியில் ஜனதா கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், முந்தைய ஜனதா கட்சியில் இருந்து உருவான சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய தேசிய லோக் தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. இக்கட்சிகள் இணைந்து ஒரே கட்சியாக செயல் படுவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வரும் சூழ்நிலையில், இப் போராட்டத்தை இணைந்து நடத்தியது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த தர்ணாவில் லாலு பேசிய தாவது: வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம், இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்று தேர்தலுக்கு முன்பு பாஜக உறுதியளித்தது. அதற்காக இன்னும் சில மாதங்கள் கூட காத்திருக்கிறோம். பணத்தை கொண்டு வர விமானங்கள் போதவில்லை என்றால், ஒட்டகங்களை ஏற்பாடு செய்வதற்கு தயாராக உள்ளோம். இவ்வாறு லாலு பிரசாத் கூறினார்.
முலாயம் சிங் கூறும்போது, “கருப்பு பணத்தை மீட்ட பின்பு, நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழைக்கும் ரூ. 15 லட்சம் வரை பணம் தரப்படும் என்று வாக்குறுதி அளித்தீர்களே. அந்த வாக்குறுதி என்ன ஆனது?” என்று கேள்வி எழுப்பினார்.
ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் நிதிஷ் குமார் பேசிய தாவது: தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை பாஜக கூட்டணி நிறைவேற்றாமல் இருப்பது ஏன்? வெளிநாடுகளிலிருந்து கருப்பு பணத்தை மீட்காமல் இருப்பது ஏன்?
பிரதமர் நரேந்திர மோடி தேர்தலுக்கு முன்பு பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளது துரதிர்ஷ்டவசமானது. வாக்குறுதி களை நிறைவேற்ற முடியா விட்டால் பதவி விலக வேண்டும்.
நாங்கள் ஒரே கட்சியாக இணைந்து செயல்படுவது என்றும், பாஜகவுக்கு எதிரான வலுவான எதிர்க்கட்சியாக இருப்பது என்றும் முடிவு செய்துள்ளோம். பாஜக வுக்கு மாற்றுக் கட்சியாக நாங்கள் இருப்போம். இவ்வாறு நிதிஷ் குமார் கூறினார்.