

ரயில்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ரயில்வே பாதுகாப்புப் படையில் பெண் காவலர்கள் பிரிவை ஏற்படுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
டெல்லியிலிருந்து படிண்டா வரை செல்லும் புதிய சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை, மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, “தற்போது ரயில்வே பாதுகாப்புப் படையில் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான பெண் காவலர்களே இருக்கின்றனர். விரைவில் பெண் காவலர்கள் அடங்கிய தனி பிரிவை ஏற்படுத்தவுள்ளோம். இதற்கென 4 ஆயிரம் பெண் காவலர்கள் பணியில் நியமிக்கப் படுவார்கள். இவர்கள், ரயில் களில் பெண் பயணிகளின் பெட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். பெண் காவலர்கள் பிரிவை ஏற்படுத்தும் திட்டம் தொடர்பான ஒப்புதலைப் பெற நிதி அமைச்சகத்தை அணுகியுள்ளோம்.
பயணிகளின் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த முடிவு செய்துள்ளோம். பெண் பயணிகள் ஸ்மார்ட் போனில் தொடர்பு கொள்வதற்கு வசதியாக மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த தொழில்நுட்ப வசதி மூலம், ஏதாவது ஆபத்து என்றால், அது தொடர்பாக பெண் பயணிகள் உடனடியாக தகவல் தெரிவிக்க வாய்ப்பு ஏற்படும்.
சரக்கு ரயில்களில் எடுத்துச் செல்லப்படும் உணவுப்பொருட் கள், காய்கறிகள் போன்றவை அழுகிவிடாமல் இருப்பதற்காக புதிய திட்டம் கொண்டு வருவது பற்றி மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்துடன் இணைந்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.
மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இல்லாததால், ரூ. 6 கோடி மதிப்பில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் நிறைவேறாமல் பாதியிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களை செயல்படுத்த மாநில அரசுகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளோம்.
ரயில்வே துறையில் அதிகாரப் பகிர்வுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறேன். டெண்டர் தொடர்பான கோப்புகள் அனைத்தும் எனது பார்வைக்கு கொண்டுவரத் தேவையில்லை. அது தொடர்பான முடிவுகளை பொது மேலாளர் நிலையில் உள்ள அதிகாரிகளே எடுக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளேன். இதன் மூலம் நிர்வாகம் வெளிப்படையாக இருக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.