Last Updated : 27 Dec, 2014 03:54 PM

 

Published : 27 Dec 2014 03:54 PM
Last Updated : 27 Dec 2014 03:54 PM

காஷ்மீரில் ஆட்சி அமைப்பதில் இழுபறி: பாஜகவுக்கு 5 நிபந்தனைகள் விதித்தது மக்கள் ஜனநாயக கட்சி

காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி), பாஜகவுக்கு 5 நிபந்தனைகளை விதித் துள்ளது.

காஷ்மீருக்கு சிறந்து அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை நீக்கக்கூடாது, 6 ஆண்டுகளுக்கும் பிடிபி மூத்த தலைவர் முப்தி முகமது சையதுவே முதல்வராக நீடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 நிபந்தனைகளை பிடிபி கட்சி முன்வைத்துள்ளது.

87 உறுப்பினர்கள் கொண்ட காஷ்மீர் சட்டப்பேரவையில் பிடிபி 28, பாஜக 25, தேசிய மாநாட்டுக் கட்சி (என்.சி.) 15, காங்கிரஸ் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சியமைக்க 44 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் அந்த மாநில அரசியலில் குழப்பம் நீடித்து வருகிறது.

திடீர் திருப்பமாக பிடிபி-க்கு ஆதரவு அளிக்க தேசிய மாநாட்டுக் கட்சி நேற்றுமுன்தினம் முன்வந்தது. ஆனால் அதனை பிடிபி ஏற்கவில்லை.

தொடர்ந்து பேச்சு

இந்நிலையில் காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பிடிபி - பாஜக இடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பிடிபி தரப்பில் மூத்த தலைவர் முசாபர் ஹுசைன் பெய்க், பாஜக தரப்பில் அதன் பொதுச்செயலாளர் ராம் மாதவ் பேச்சுவார்த்தையில் பங்கேற் றுள்ளனர். எனினும் முதல்வர் பதவி, 370 சட்டப்பிரிவு, ஆயுதப்படை சட்டம் ஆகிய விவகாரங்களில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகத் தெரிகிறது.

5 நிபந்தனைகள்

இதுதொடர்பாக பிடிபி கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் நயீம் அக்தர் மற்றும் டாக்டர் சமீர் கோயல் ஆகியோர் கூறியதாவது:

தேசிய மாநாட்டுக் கட்சி விளையாட்டுத்தனமான ஒரு கட்சி. அந்த ஆட்சியை அகற்றும் விதமாகவே மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு அந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை.

பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது தற்கொலைக் குச் சமம் என்று கூறுவதை நாங்கள் ஏற்கவில்லை. மாநிலத்தில் பிடிபியின் கொள்கைபடியே ஆட்சி நடத்துவோம். இப்போதைய நிலையில் பிடிபி தரப்பில் 5 நிபந்த னைகளை முன்வைத்துள் ளோம்.

1) பிடிபியின் சுயாட்சியில் தலையிடக்கூடாது, 2) அமைதி நிலவும் பகுதிகளில் ஆயுதப் படை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், 3) 370 சட்டப்பிரிவை நீக்கக்கூடாது, அதனை மேலும் வலுப்படுத்த வேண்டும். 4) பிடிபி மூத்த தலைவர் முப்தி முகமது சையதுவே 6 ஆண்டுகளுக்கும் முதல்வராக நீடிக்க வேண்டும், 5) காஷ்மீர் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும்.

இந்த ஐந்து நிபந்தனைகளை ஒப்புக் கொண்டால் கூட்டணி உறுதி செய்யப்படும். அதன்பின்னர் மேலும் சில நிபந்தனைகளையும் விதிப்போம். காஷ்மீரில் பிடிபி தலைமையில் ஆட்சி அமைந்தால் மக்கள் மிகப்பெரிய மாற்றத்தை காண்பார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

காங்கிரஸ் வியூகம்

பிடிபி-பாஜக கூட்டணி அமை வதை தடுக்க காங்கிரஸ் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிடிபி-க்கு தானாக முன்வந்து ஆதரவு அளித்துள்ள காங்கிரஸ், சுயேச்சைகள் மற்றும் சிறிய கட்சிகளைச் சேர்ந்த 7 எம்எல்ஏ க்களி டமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் சோயஸ் கூறியபோது, பிடிபி-யும் பாஜகவும் தண்ணீரும் எண்ணெயும் போன்ற வர்கள். அவர்கள் நிச்சயமாக ஒட்டமாட்டார்கள் என்றார்.

பாஜக விளக்கம்

காஷ்மீர் நிலவரம் குறித்து பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறியபோது, ஆட்சி அமைப்பது தொடர்பாக முக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார். எந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை.

காஷ்மீரில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக பிடிபி மற்றும் பாஜகவுக்கு மாநில ஆளுநர் என்.என்.வோரா அழைப்பு விடுத்துள்ளார். ஜனவரி 1-ம் தேதிக்குள் இரு கட்சிகளும் தங்களது முடிவை தெரிவிக்க வேண்டும் என்று அவர் கெடு விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x