

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக பாஜக தலைவர்கள் அருண் ஜேட்லி மற்றும் அருண் சிங் ஜம்மு விரைந்துள்ளனர்.
தேசிய மாநாட்டுக் கட்சியின் ஆதரவுடன் பாஜக அங்கு ஆட்சியமைக்கும் காயை நகர்த்தியுள்ளது. அதாவது, தேசிய மாநாட்டுக் கட்சிக்கு முதல்வர் பதவியை வழங்கும் யோசனையுடன் பாஜக அங்கு களமிறங்கியுள்ளது.
தேசிய மாநாடு தலைவர் உமர் அப்துல்லா பாஜக தலைவர்களான அமித் ஷார், அருண் ஜேட்லி, ராம் மாதவ் ஆகியோரைச் சந்தித்த பிறகு இந்த நிலை ஜம்முவில் தோன்றியுள்ளது.
அயல்நாடு செல்லவிருந்த உமர் அப்துல்லா இந்த வளர்ச்சியை அடுத்து ஸ்ரீநகருக்கு திரும்பியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய மாநாடு, மத்திய அமைச்சரவையிலும் பதவி கோரும் முன்மொழிவை தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
பாஜக 25 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மக்கள் ஜனநாயகக் கட்சி 28 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மேலும் கானி லோனியின் 2 இடங்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் என்று தெரிகிறது. 4 சுயேட்சை வேட்பாளர்கள் பாஜகவை ஆதரிக்கும் நிலை தோன்றியுள்ளது.
இதனுடன் தேசிய மாநாடு கட்சியின் 15 இடங்களையும் சேர்த்து பாஜக-வுக்கு 46 இடங்களின் ஆதரவு கிட்டியுள்ளது. ஆகவே, ஜம்முவில் ஆட்சியமைக்கத் தேவையான 44 இடங்கள் என்ற வரையறையை பாஜக கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பேச்சு வார்த்தைகளுக்காகவும் விஷயத்தை சுமுகமாக முடிக்கவும் அருண் ஜேட்லி, அருண் சிங் ஆகியோர் ஜம்மு காஷ்மீர் விரைந்துள்ளனர்.