அமைச்சர் சாத்வியை நீக்கக் கோரி அமளி: கருப்புத் துணியுடன் எதிர்க்கட்சிகள் போராட்டம்

அமைச்சர் சாத்வியை நீக்கக் கோரி அமளி: கருப்புத் துணியுடன் எதிர்க்கட்சிகள் போராட்டம்
Updated on
2 min read

மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதியின் சர்ச்சைக் குரிய பேச்சைக் கண்டித்து நேற்று எதிர்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதியின் சர்ச்சைக் குரிய பேச்சு தொடர்பாக மக்களவையில் பிரதமர் மோடி பேசியதாவது:

பிரச்சினை மிகவும் உணர்வு பூர்வமாக இருந்த போதும் மக்களவையின் உறுப்பினர்கள் அனைவரும் இந்த அவையை வழக்கம் போல் செயல்படச் செய் தமைக்கு நன்றி. இந்த பிரச்சினை, நாடாளுமன்றத்தில் எழுவதற்கு முன்பாகவே எனது கட்சியின் எம்பிக்கள் கூட்டத்தில் அதை கண்டித்ததுடன் எனது கடும் ஆட்சேபணையையும் தெரி வித்தேன். இதற்காக இங்கு மன்னிப்பும் கேட்ட அந்த உறுப்பினர் புதியவர், கிராமத்தை சேர்ந்தவர். அவர் சார்ந்த சமூகப் பின்புலனையும் நாம் அனைவரும் அறிவோம்.

அவர் இங்கு மன்னிப்பு கோரியுள்ளார். இவ்வளவு பெரிய அவையின் முன் நம்மில் ஒருவர் மன்னிப்பு கேட்கும் போது நாமும் அதற்கு உதாரணமாக இருக்க வேண்டும். இந்த அவையில் அனைவரும் கண்ணியத்துடன், மரியாதையும் காத்து அவையின் உள்ளே மற்றும் வெளியே பேசும் போது அதன் எல்லைகளுக்குள் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். இதைப் பின்பற்றினால் பிரச்சினைகள் எழாது. ஒரு புதிய அமைச்சர் மன்னிப்பு கேட்ட பின் அனைத்துக் கட்சியினரும் அதை பெருந்தன்மையாக மன்னித்து அவையில் தம் வழக்கமான நட வடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.

மோடியின் விளக்கத்துக்குப் பிறகும் காங்கிரஸ் தன் எதிர்ப்பைக் கைவிடவில்லை. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் வாயில் கருப்புத் துணியை கட்டிக் கொண்டு வந்திருந்தனர்.

மோடி விளக்கத்தை நிராகரித்து மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் நாடாளுமன்றத்தின் வெளியிலும் வந்து போராட்டம் நடத்தினர்.

இது குறித்து செய்தியாளர் களிடம் ராகுல் காந்தி கூறும்போது, “ஜனநாயகம் தொடர்பான செயல் பாடுகளை நாடாளுமன்றத்தில் அனுமதிக்கக் கூடாது என்பது, இந்த அரசின் மூத்த தலைவர்களது மனப்பான்மை ஆகும். இதை எதிர்த்து நாம் ஒவ்வொரு கட்டத் திலும் போராடுவோம்” என்றார்.

மாநிலங்களவையில் அமளி

நான்காவது நாளாக எதிர்க்கட்சி கள், இணை அமைச்சர் சாத்வியை பதவி நீக்கம் செய்யக் கோரி கோஷமிட்டு அமளியில் ஈடுபட்ட னர். இதனால், மாநிலங்களவை தொடர்ந்து செயல்பட முடியாமல் போனதால் மதியம் வரையும், பிறகு நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இது குறித்து காங்கிரஸ் கட்சி யின் அனந்த் சர்மா பேசும்போது, “பிரதமரின் விளக்கத்தை பொறுமையுடன் கேட்டோம். அதில் அவர் இணை அமைச்சர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கவில்லை” என்றார். அப்போது, மாநிலங் களவை துணை சபாநாயகர் பி.ஜே.குரியன் கூறும்போது, “இதற்கு நீங்கள்தான் அரசுடன் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி திங்கள்கிழமைக்குள் முடிவுக்கு வர வேண்டும். உறுப்பினர்கள் இந்த அவை செயல்படக் கூடாது என விரும்பினால் மாநிலங்களவைத் தலைவர் என்ன செய்ய முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

அமைதி காத்த அதிமுக

பிரதமர் விளக்கம் அளித்து விட்டதால் பிரச்சினையை முடித்து அவையை நடத்த வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் கோஷ மிட்டனர். இந்த இரு பிரச்சினை களிலும், அதிமுக மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய இரு கட்சியினர் மட்டும் எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதி காத்தனர்.

எதிர்க்கட்சிகளின் கூட்டறிக்கை

“அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக இணை அமைச்சர் பேசியது தவறு எனவும், அதற்காக அடிப்படை தேவையாக அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். கண்டனம் தெரிவித்து மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 9 கட்சிகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in