

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு இரண்டு மடங்கு பலத்துடன் பதிலடி கொடுங்கள் என இந்திய ராணுவத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் அறிவுறுத்தியுள்ளார்.
ஜம்முவில் பல்லன்வாலா பகுதியில் நேற்று (செவ்வாய்கிழமை) பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.
கடந்த ஒருவாரத்தில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 5 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
இவற்றை குறிப்பிட்டே மனோகர் பரிக்கர், பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு இரண்டு மடங்கு பலத்துடன் பதிலடி கொடுங்கள் என இந்திய ராணுவத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், பாதுகாப்பு விஷயத்தை பொருத்தவரை பதில் தாக்குதலுக்கு தயங்க வேண்டாம் என்பதே இந்திய அரசின் நிலைப்பாடு என்றார்.
இந்திய படைகள் எல்லையில் ஒருபோதும் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில்லை, எப்போதும் பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி மட்டுமே கொடுத்து வருகிறது என தெரிவித்தார்.
அசாமில் கடந்த வாரம் பிரிவினைவாதிகள் நடத்திய தாக்குதல் பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டதற்கு ராணுவம் மெத்தனமாக செயல்பட்டதே காரணம் என்று எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்த கேள்வியை திட்டவட்டமாக மறுத்த பரிக்கர், உள்ளூர் நிர்வாகம் பதில் தாக்குதலுக்கு முட்டுக்கட்டை போட்டதாலேயே அந்தச் சம்பவம் நடந்தது என்றார்.