

காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்ற பாஜக மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் கார் மற்றும் அவருக்கு பாதுகாப்பாக சென்ற வாகனங்கள் மீதும் மர்ம நபர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி கூறியதாவது:
ஜம்மு மண்டலத்துக்குட்பட்ட காந்தி நகர் தொகுதியின் பாஜக வேட்பாளர் கவீந்தர் குப்தாவுக்கு ஆதரவாக போர் கேம்ப் பகுதியில் சித்து நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவரது வாகனத்தின் மீது மர்ம நபர்கள் செங்கற்க ளாலும், கற்களாலும் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் சித்துவின் கார் டிரைவர் காயம் அடைந்தார். எனினும் சித்து காயம் அடையாமல் தப்பினார்.
தங்களுடைய மத நூலை அவமதிக்கும் வகையில் சித்து கருத்து தெரிவித்திருந்ததாகக் கூறி அவர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் அருண் குப்தா கூறும்போது, “கடந்த 3 நாட்களாக பிரச்சாரம் செய்து வரும் சித்து மீது நடைபெற்ற 2-வது தாக்குதல் இது.
நேற்று நடைபெற்ற கல் வீச்சில் சித்துவின் வாகனம் மோசமாக சேதம் அடைந்தது. காயமடைந்த அவரது கார் டிரைவர் பர்வீன் சிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாஜகவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து வரு வதால் விரக்தி அடைந்த காங்கிரஸ் எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர்” என்றார்.