Published : 03 Dec 2014 07:24 PM
Last Updated : 03 Dec 2014 07:24 PM

புத்தி சுவாதீன குறைபாடுடைய, உள-சமூகச் சிக்கல்கள் உள்ள பெண்களை மோசமாக நடத்துகின்றனர்

அறிவுத்திறன் குறைபாடு அல்லது புத்தி சுவாதீனம் குறைவுடைய மற்றும் உள-சமூக சிக்கல்கள் உள்ள பெண்களை விலங்குகளை விட கேவலமாக நடத்துகின்றனர் என்று மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு அறிக்கை ஒன்று சாடியுள்ளது.

தனது கணவன் மற்றும் மூத்த வாரிசுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 46 வயது தீபாலி என்ற பெண் மனநல காப்பகத்திற்கு அனுப்பப்படுகிறார். இவரது உடல்/மன நிலை வரலாறு மற்றும் மன நல மருத்துவரின் அறிக்கை என்ன கூறுகிறது எனில், இவருக்கு தீவிர மனநோய் இல்லை என்பதற்காக இவரை மனநல காப்பகத்திலிருந்தோ, மருத்துவ சிகிச்சையிலிருந்தோ விடுவிக்க முடியாது என்கிறது.

இந்தப் பெண்மணி போன்று எண்ணற்ற பெண்கள் மனநலக் காப்பகத்திற்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டு அங்கு அவர்களுக்கு மனநோய்க்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

"விலங்குகளை விடவும் மோசமாக நடத்தப்படுகின்றனர்: இந்திய மனநல காப்பகங்களில் அறிவுத்திறன் குறைபாடு மற்றும் உள-சமூக சிக்கல்கள் உள்ள பெண்மணிகள் மற்றும் இளம் பெண்களுக்கு எதிரான வன்முறை” என்ற இந்த மனித உரிமை அறிக்கை மேற்கண்டவாறு சில அநீதிகளை சுட்டிக்காட்டியுள்ளது.

மனநல காப்பகங்களில் பெண்களின் நிலை:

மனநல மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்படும் பல பெண்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியுள்ள இந்த அறிக்கை, மனநலமருத்துவமனைகளில் இவர்கள் சந்திக்கும் கொடுமைகளையும் வர்ணித்துள்ளது. இவர்கள் அங்கு தூய்மை, சுகாதாரமற்ற நிலையில் பராமரிக்கப்படுகின்றனர், உடல் ரீதியான, பாலியல் ரீதியான வன்முறைகளையும் சந்திக்கின்றனர், மின் அதிர்ச்சி சிகிச்சைக்கும் ஆட்படுத்தப்படுகின்றனர் என்று கூறியுள்ளது இந்த அறிக்கை.

பெண்களை அவர்கள் சம்மதம் இல்லாமலேயே எப்படி இப்படிப் பைத்தியம் என்று கூற முடிந்து, மருத்துவமனைக்கு அனுப்ப முடிகிறது என்பதை ஆவண பூர்வமாக தெரிவிக்கிறது இந்த அறிக்கை. பல பெண்கள் இங்கு கைவிடப்பட்ட நிலையில் தத்தளித்து வருகின்றனர். மேலும் பெண்கள் என்பதாலேயே பாகுபாடும் பார்க்கப்படுகிறது.

”டெல்லியில் இப்படிப்பட்ட அமைப்பு ஒன்றில், அதாவது 350 பேர் மட்டுமே இருக்க முடிந்த இடத்தில், 900 பெண்கள் உள்ளனர்” என்று ஆய்வாளர் கீர்த்தி சர்மா கூறுகிறார்.

பலவந்தமாக காப்பகம், மருத்துவமனைகளுக்கு அனுப்புதல்:

இப்படிப்பட்ட சமூக நிறுவனங்களில் பலவந்தமாக சேர்க்கப்பட்ட பெண்கள் பலபேருடன் இந்த களப்பணியாளர்கள் உரையாடிய போது அதிர்ச்சிகரமான, வேதனையான பல விஷயங்கள் தெரியவந்ததாக கூறுகின்றனர். இத்தகைய பெண்களை பலவந்தமாக மனநல காப்பகங்களில் அடைப்பதை விட சமூகசேவை, அமைதியான வாழ்க்கைச் சூழல் போன்றவற்றை அளிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்போவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் வலுக்கட்டாயமாக ஒருவரையும் எந்த இடத்திலும் சேர்ப்பது தடை செய்யப்பட்ட விவகாரமாகும், ஆனாலும் இதனைத் தடுக்க முடிவதில்லை.

“பெண்களை வீட்டு உறவினர்களே கொண்டு வந்து மனநலக் காப்பகத்தில் அடைக்கின்றனர், சில சமயங்களில் போலீஸும் குடும்பத்தினருக்கு உதவி புரிகின்றனர். காரணம் அரசு இவர்களுக்கான போதுமான சேவை, வசதிகளை வழங்குவதில்லை. ஒருமுறை மனநல காப்பகத்திற்கு வந்து விட்டால், அங்கு பயம், வசை, தனிமை, வன்கொடுமை உள்ளிட்ட வதைகளுக்கு இவர்கள் ஆளாகின்றனர்” என்கிறார் கீர்த்தி சர்மா.

டிசம்பர் 2012ஆம் ஆண்டு முதல் நவம்பர் 2014 வரை இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். டெல்லி, கொல்கத்தா, மும்பை, புனே, பெங்களூரு, மைசூர் ஆகிய நகரங்களில் இவர்கள் களப்பணியில் ஈடுபட்டனர். சுமார் 200க்கும் மேற்பட்ட உளச்சிக்கல் நிறைந்த பெண்களையும், அவர்களது குடும்பத்தினரையும், மருத்துவ நலம் விரும்பிகளையும் இந்த களப்பணியாளர்கள் சந்தித்துள்ளனர்.

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு:

இந்தியாவில் உள-சமூக சிக்கல்கள் உள்ளவர்கள் அல்லது அறிவுத்திறன் குறைபாடுடையவர்கள் பற்றிய அதிகாரபூர்வமான எண்ணிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்திய மக்கள் தொகையில் 2.21 சதவீதத்தினர் அறிவுத்திறன் குறைபாடு இருக்கிறது என்று 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. 722,826 பேர்களுக்கு உள-சமூகச் சிக்கல்கள் இருக்கின்றன. உள-சமூகச் சிக்கல்கள் என்றால் மனச்சிதைவு நோய் உள்ளிட்ட மனநோய்கள் என்று பொருள்.


தமிழில்: முத்துக்குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x