

ஜனதா கட்சிகள் ஆறு ஒன்றிணைந்து புதிய கட்சியாக உருவெடுக்கும் திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆறு கட்சிகளின் தலைவர்களும் கட்சிகளை இணைக்க ஒப்புதல் அளித்துள்ளனர். இதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு கட்சிகளின் தலைவர்கள் அதிகாரம் அளித்துள்ளனர்.
காங்கிரஸுக்கு எதிராக 1988-ல் ஜனதா மற்றும் லோக் தளம் கட்சிகள் இணைந்து ஜனதா தளம் கட்சி உருவானது. இக்கட்சி சார்பில் வி.பி.சிங் பிரதமராக பதவியில் அமர்ந்தார். காலப்போக்கில் இக் கட்சி துண்டு துண்டாக உடைந்தது.
அவ்வாறு சிதறிய கட்சிகள் மீண்டும் ஒன்றிணைந்து புதிய கட்சியை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
முலாயம்சிங்கின் சமாஜ்வாதி, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், நிதிஷ்குமார், சரத்யாதவின் ஐக்கிய ஜனதா தளம், தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், சவுதாலாவின் இந்திய தேசிய லோக்தளம், கமல் மொரார்காவின் சமாஜ்வாதி ஜனதா ஆகிய ஆறு கட்சிகளும் ஒன்று சேர சம்மதித்துள்ளன.
புதிய கட்சி
இதுதொடர்பாக முலாயம் சிங் வீட்டில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், கட்சிகளின் இணைப் புக்கு அனைவரும் சம்மதம் தெரி வித்தனர். கட்சி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய முலாயம் சிங்குக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.
இக்கட்சிகள் இணைந்து முதல் நாடாளுமன்ற நடவடிக்கை யாக, கருப்புப் பண விவகாரத் தில் மத்திய அரசு தோல்வியடைந் தது, விவசாயிகள் பிரச்சினையில் நிலைமாறிப் பேசுவது, வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது ஆகியவற்றுக்கு எதிராக வரும் 22-ம் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.
புதிய கட்சி உருவாக்கம் தொடர்பாக நிதிஷ்குமார் கூறும் போது, “ஒரே தத்துவம், கொள்கையுடைய கட்சிகள் ஒரே கட்சியாக இணைய வேண்டும் என அனைவரும் கருதினோம். நரேந்திர மோடிக்கு அஞ்சி ஒரே கட்சியாக இணையவில்லை. தற்போதைய அரசியல் சூழ்நிலையால் ஒரே தளத் தில் இயங்க முடிவு செய்தோம்.
இடதுசாரிகளுடன் இணைந்து செயல்பட விரும்பி, அவர்களை அணுகியுள்ளோம்.தேசிய பிரச் சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளோம். குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டும் முடங்கிவிட விரும்பவில்லை. ஆகவே, டெல்லி தேர்தலில் கவனம் செலுத்தப்போவதில்லை. மக்கள் பிரச்சினைகளை நாடாளு மன்றத்தில் ஒருமித்த குரலில் எழுப்புவோம்” என்றார்.