

திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றிய விரிவுரையாளர் மீது ஆசிட் வீசிய பெண்ணை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், நல்லபாடு என்ற இடத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருபவர் வெங்கட ரமணா (33). இவர் இதற்குமுன் நரசராவ் பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரை யாளராக பணியாற்றினார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சவுஜன்யா (18) என்பவர் அந்தக் கல்லூரியில் படித்துவந்தார். அப்போது வெங்கடரமணாவும், சவு ஜன்யாவும் காதலித்து வந்தனராம். திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வெங்கடரமணா நெருக்கமாகப் பழகியுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெங்கட ரமணா வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதுபற்றி சவுஜன்யா கேட்டபோது, “வேண்டுமானால் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறேன்” என்று வெங்கட ரமணா திமிராக பதில் அளித்தாராம்.
இதனால் ஆத்திரமடைந்த சவுஜன்யா நேற்று நல்லபாடு தனியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்று, வெங்கட ரமணாவை வெளியே வருமாறு அழைத்துள்ளார். அவர் வெளியே வந்தபோது, அவர் மீது சவுஜன்யா திடீரென ஆசிட் வீசியுள்ளார். இதில் வேதனையால் துடித்த வெங்கட ரமணா குண்டூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். முகம், கழுத்து, மார்பு, கைகள் போன்ற பாகங்களில் காய மடைந்த அவர், அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.குண்டூர் போலீஸார் சவுஜன்யாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.