

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாசலப் பிரதேசத்தை எந்த சக்தியாலும் பறிக்க முடியாது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
அருணாசலப் பிரதேசத்தின் பாசிகாட் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி பங்கேற்றார். அப்போது சீனாவுக்கு சவால் விடுக்கும் வகையில் அவர் பேசியதாவது:
நான் இங்கு கனத்த இதயத் தோடு வந்திருக்கிறேன். அருணாசலப் பிரதேச இளைஞர் நிடோ டெல்லியில் கொலை செய்யப்பட்டது துரதிஷ்டவச மானது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது கடமையில் இருந்து தவறிவிட்டது.
சீனா மாற வேண்டும்
அருணாசலப் பிரதேசம் இந்தி யாவின் ஒருங்கிணைந்த பகுதி, எந்த சக்தியாலும் அதனை பறிக்க முடியாது. இந்த மாநில மக்கள் சீனாவுக்கு ஒருபோதும் அஞ்சியது இல்லை. இங்கு வாழும் மக்கள் அனைவருமே போர் வீரர்கள்.
1962-ல் சீன ராணுவம் முன் னேறியபோது அருணாசல் மக்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். அந்தப் போரின்போது ஜெய்ஹிந்த் முழக்கத்தோடு இப் பகுதி மக்கள் தீரத்துடன் போரிட்டதை மறக்கவே முடியாது. அப்போதும் இப்போதும் இம்மாநில மக்கள் மிகுந்த தேசப்பற்று கொண்டவர்களாக உள்ளனர்.
எல்லையை விரிவுபடுத்தும் மனப்பான்மையை சீனா மாற்றிக் கொள்ள வேண்டும். நாடு பிடிக்கும் கொள்கையை உலகம் இப்போது ஏற்றுக் கொள்ளாது. அமைதி, வளர்ச்சி, வளம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே இந்திய- சீன உறவு இருக்க வேண்டும்.
3 எச் திட்டம்
பாஜக ஆட்சிக்கு வந்தால் வடகிழக்கு மாநிலங்களில் “3H” (Herbal, Horticulture, Handicrafts) முறையில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் அதன்படிமூலிகை, தோட்டக் கலை, கைவினைப் பொருள் தயாரிப்பு துறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இளைஞர்களுக்காக அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
சுவிட்சர்லாந்துக்கு எந்த வகை யிலும் அருணாசலப் பிரதேசம் குறைந்தது அல்ல. உலகின் சுற்றுச்சூழல் தலைநகராக இந்த மாநிலத்தை மாற்ற முடியும். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது சிக்கிம் மாநில வளர்ச்சிக்காக சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்தார். இந்தப் பிராந்தியத்தில் மீண்டும் தாமரை மலரும்.
அருணாசலப் பிரதேசத்துக்கும் குஜராத்துக்கும் பிணைப்பு உள்ளது. அருணாசலில்தான் சூரியன் முதலில் உதிக்கிறது. கடைசியாக குஜராத்தில் அஸ்தமனம் ஆகிறது.
இந்துக்களுக்கு புகலிடம்
உலகின் பல்வேறு நாடுகளில் இந்துக்கள் துன்புறுத்தப்படுகின்றனர். அவர்கள் எங்கு போவார்கள்? அவர்களுக்கு ஒரே புகலிடம் இந்தியா மட்டும்தான். அவர்களுக்கு புகலிடம் அளிக்க வேண்டியது நமது கடமை. வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் இந்துக்களுக்கும் புகலிடம் அளிக்கப்பட வேண்டும்.
வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் பிடியில் இருந்து இந்தியா விடுதலை பெறும். புதிய வளர்ச்சிப் பாதை அமைக்கப்படும். கடந்த 60 ஆண்டுகளாக நாட்டை காங்கிரஸ் சீரழித்துள்ளது. எனக்கு 60 மாதங்கள் கொடுங்கள். நான் இந்த நாட்டை மாற்றிக் காட்டுகிறேன். உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன் என்றார் நரேந்திர மோடி.