Published : 09 Dec 2014 09:49 AM
Last Updated : 09 Dec 2014 09:49 AM

அலகாபாத்தில் வள்ளுவருக்கு சிலை: உத்தரப்பிரதேச முதல்வரிடம் கோரிக்கை

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவிடம், பாஷா சங்கத்தின் வட இந்திய உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாஷா சங்க பொதுச் செயலாளரும், இந்தி அறிஞருமான எம்.கோவிந்தராஜ் முதல்வர் அகிலேஷ் யாதவிடம் இது தொடர்பான மனு அளித்தார்.

அதில், “யமுனை நதியின் தென்கரை சாலை இன்னும் பெயரிடப்படாமல் இருப்பதால் அதற்கு, ‘திருவள்ளுவர் மார்க்கம்’ எனப் பெயரிட்டு அங்கு திருவள்ளுவர் சிலை ஒன்றை வைக்க வேண்டும். சுமார் ஆறு கி.மீ நீளமுள்ள அந்த சாலைகளில் மரங்களை நட்டு அதில், திருக்குறளை இந்தி மொழி பெயர்ப்புடன் எழுதி வைக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் கோவிந்தராஜன் கூறியதாவது:

பாஷா சங்க நிறுவனர் மறைந்த டாக்டர்.கிருஷ்ணசந்த் கவுடுக்கு திருவள்ளுவர் மீது அதீத ஈடுபாடு உண்டு. அவர்தான் அலகாபாத்தில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை 1992-ல் முதன்முறையாக எழுப்பினார். அவர் புற்றுநோயால் இறந்து விட்டதால், வள்ளுவருக்கு சிலை எடுக்கும் முயற்சி தடைபட்டது. எனினும், பாஷா சங்கம் இக்கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முதல்வர் அகிலேஷ் யாதவிடம் இதை எடுத்துக் கூறியுள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த போது, அலகாபாத் மாநகராட்சி நிர்வாகம், அந்நகரில் அனைத்து மொழி பேசுபவர்களும் வந்து செல்லும் இந்துஸ்தான் அகாடமி வளாகத்தில் சிலை வைத்துக் கொள்ளலாம் என ஆலோசனை வழங்கியது. ஆனால், பாஷா சங்கம் இதை ஏற்க மறுத்து விட்டது.

திரிவேணி சங்கமத்தில்தான் சிலை வைக்க வேண்டும் என்பதில் இச்சங்கத்தின் வட இந்திய உறுப்பினர்கள் உறுதி யாக இருந்தனர். தற்போது இக்கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பாஷா சங்கத்தின் பொருளாளரான சந்திர மோகன் பார்கவா கூறியதாவது:

மொழி வேற்றுமை இல்லாமல் திருவள்ளுவருக்கு அலகாபாத்தில் சிலை வைக்கப்பட வேண்டும் எனக் கோருகிறோம். இதற்கான அனுமதி கிடைத்து விட்டால் 100 தமிழ் வித்வான்களை அலகாபாத்துக்கு அழைத்து பெரியவிழா எடுப்போம். திருவள்ளுவர் தமிழர்களுக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கே சொந்தமானவர்.

ஒருமுறை அலகாபாத் வந்திருந்த பெருங்கவிக்கோ டாக்டர்.வ.மு.சேதுராமன், சிலை வைப்பதற்காக மேற் கொண்டிருக்கும் முயற் சியை பார்த்து வியந்து, வி.ஜி.சந்தோஷத்திடம் உதவுமாறு கேட்டுக் கொண்டார். இதை ஏற்று அவரும் ஆறரை அடி உயரத்தில் ஒன்றரை டன் எடையுள்ள திருவள்ளுவர் சிலை தயார் செய்தார். இவ்வாறு, பார்கவா தெரிவித்தார்.

மொழிகளை இணைப்பதற்காக தேசிய அளவில் ‘பாஷா சங்கம்’ என ஒரு அமைப்பு 1977-ல் அலகாபாத்தில் உருவாக் கப்பட்டது. இதன் சார்பில் திருவள்ளுவர், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, பாரதியார் மற்றும் பாரதி தாசன் உட்பட பல தமிழ் கவிகளுக்கு அலகாபாத்தில் விழா எடுக்கப்பட்டு சிறப்பு மலர்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இதே போல், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு உட்பட மற்ற இந்திய மொழி அறிஞர்களுக்கும் விழா எடுக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x