முக்கிய மசோதாக்கள் கொண்டுவர முடியாமல் போனதற்கு பாஜக அரசுதான் காரணம்; எதிர்க்கட்சிகள் அல்ல: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா கருத்து

முக்கிய மசோதாக்கள் கொண்டுவர முடியாமல் போனதற்கு பாஜக அரசுதான் காரணம்; எதிர்க்கட்சிகள் அல்ல: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா கருத்து
Updated on
2 min read

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற முடியாமல் போன தற்கு எதிர்க்கட்சிகள் காரணம் அல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் செய்த சாதனையாக நீங்கள் கருதுவது?

இதில் எதிர்க்கட்சிகள் அல்லது அரசு செய்த சாதனை எனக் குறிப் பிட்டுப் பார்க்க முடியாது. நாடாளு மன்றத்தில் என்னென்ன திட்டங் கள் அமல்படுத்தப்பட்டன, அமளி காரணமாக நிறைவேற்ற முடியா மல்போன ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களுடன் அவை முடிந்ததா என்றுதான் பார்க்க வேண்டும். அதிலும், மக்களவை மற்றும் மாநிலங்களவை என அதன் இரு அவைகளையும் பார்க்க வேண்டும்.

மாநிலங்களவையில் என்னால் முன்மொழியப்பட்ட மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மீது விவாதம் நடந்தது. இத்துடன் எதிர்க்கட்சிகள் மற்றும் இதர கட்சிகளின் வற்புறுத்தலின் பேரில் கருப்புப்பணம் மீது குறுகிய நேர விவாதம் நடைபெற்றது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக அலிகரில் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் தினத்தன்றும் மதமாற்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. இத்தனை வருடங்களாக கண்டு கொள்ளாத எதிர்க்கட்சிகள் இப்போது மட்டும் நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பியது ஏன்?

இதை கண்டுகொள்ளவில்லை எனக் கூற முடியாது. ஏனெனில், இந்தியா ஒரு பெரிய நாடு. ஒவ் வொரு மாநிலத்துக்கும் ஏற்றவாறு அரசியல் மற்றும் சமூக சூழல்கள் மாறுகின்றன.

இதன் பின்னணியில் அந்தப் பிரச்சினைகளைப் பார்க்க வேண்டும். உ.பி., உத்தராகண்டில் ஆதிவாசி, பழங்குடியின மக்கள் இந்துவாக மாறியபோது யாரும் கண்டுகொள்ளவில்லை. அதே மக்கள், கிறிஸ்தவர்களாக மாறிய போது இந்து அமைப்புகள் பிரச்சினை செய்தார்கள். ஏழை மற்றும் அடித்தட்டு மக்கள் மதமாற்றம் செய்யப்படுவதால் இதை அவையில் இப்போது கிளப்பினோம்.

இதற்கு பிரதமர்தான் பதில் அளிக்க வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தியது ஏன்?

மாநிலங்களைவையில் பேசிய அவைத்தலைவர் ஹமீது அன்சாரி, பொது இடங்களில் அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமுக அமைதி கெடும் வகையில் பேசக் கூடாது எனக் கேட்டுக் கொண்டார். அதன் பிறகும், பாஜக மக்களவையின் உறுப்பினர்கள் அதைத் தொடர்ந்தனர். மதமாற்ற பிரச்சினை நாடாளுமன்றத்தில் மிகவும் அதிகமான கவலையை உண்டாக்கியது. இதற்கு ஒரு கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் நாட்டின் பிரதமர் என்ற முறையில் அவர் பதிலளிப்பதுதான் முறையானது.

அதன் மீது அரசு என்ன நினைக்கிறது என்பதையும், தமது நிலைப்பாடு என்ன என்பதையும் தெளிவுபடுத்தி பிரதமரால்தான் சரியான பதிலை தர முடியும். இதனால்தான் அந்தப் பிரச்சினையில் பிரதமரின் பதிலைக் கேட்டு வற்புறுத்த வேண்டியதாயிற்று.

இதுவரை இல்லாத வகையில் இந்த கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் நிறைவேற்றி சாதனை செய்யப்பட்டிருப்பதாக மக்களவை சபாநாயகர் பெருமிதம் கொள்கிறாரே?

மக்களவையைப் பொறுத்த வரை பாரதிய ஜனதாவுக்கு பெரும்பான்மை இருப்பதால் அங்கு பல்வேறு சட்ட மசோதாக்கள் நேரடியாக நிறைவேற்றப்பட்டு விட்டன. அதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட துறைகளுக்காக இருக்கும் பல்வேறு ஆய்வு மற்றும் நிலைக்குழுக்களுக்கு அந்த மசோதாக்கள் முறையாக அனுப்பப்படவில்லை. அவை களை நிறைவேற்றுவதற்கு முன்பாக அதன் ஒவ்வொரு கூறுகளையும் மிகவும் நுணுக்கமாகப் பார்க்க வேண்டி இருக்கிறது. நிலக்கரி மற்றும் இன்சூரன்ஸ் ஆகிய முக்கிய இரு மசோதாக்களும் திட்டமிட்டபடி கொண்டுவர முடியாததற்கு காரணம் நாங்களல்ல. இதற்கு, மாநிலங்களவையில் ஆளும் அரசாங்கம் நடந்து கொண்ட முறைதான் காரணம்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பிரச்சினைகளை திசை திருப்பி எதிர் கட்சிகளின் தாக்குதலை சமாளிக்கவே மதமாற்றப் பிரச்சினை திட்டமிட்டு எழுப்பப்பட்டதாகக் கூறப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தப் புகாரில் உண்மை இருப்பதாகவே கருதுகிறேன். ஏனெனில், தற்போது எழுந்துள்ள மதமாற்ற பிரச்சினையை சாதார ணமாகப் பார்க்க முடியவில்லை. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் ஆர்.எஸ்.எஸ், விஹெச்பி, பஜ்ரங்தளம், இந்துசேனா போன்ற அமைப்புகள் சொன்ன கருத்துகள் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும் சமூக மதநல்லிணக்கத்துக்கு எதிராகவும் இருந்து வருகிறது.

இவ்வாறு ராஜா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in