நிலக்கரி ஊழல் வழக்கு 2 அரசு அதிகாரிகளை விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ மனு
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக, இரு அரசு அதிகாரிகளை விசாரிக்க அனுமதி கோரியுள்ளதாக சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் பல லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. மத்தியபிரதேசத்தைச் சேரந்த கமலம் ஸ்பாஞ்ச் ஸ்டீல் அண்டு பவர் நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது
அப்போது சிபிஐ தரப்பில், “அப்போதைய நிலக்கரித்துறை அமைச்சக இணைச் செயலாளர் கே.எஸ். குரோபா, அப்போதைய இயக்குநர் (நிலக்கரி ஒதுக்கீடு- பிரிவு-1) கே.சி. சமாரியா ஆகியோர் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைபெறும் வகையில் குற்றச் செயல்கள் புரிந்துள்ளனர். ஆகவே, அவர்களை விசாரிக்க அனுமதிகோரப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பான முடிவு வரும் ஜனவரி 16-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
