

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பொறியாளர் மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸ்(24) தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கடந்த 13-ம் தேதி பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.அவர் மீது நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தல் உள்ளிட்ட 4 கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மேக்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மேற்கு வங்கத்தில் இருந்து பெங்களூரு வந்துள்ளனர். புதன்கிழமை காலை மேக்தியின் தந்தை மேகெயில் பிஸ்வாஸும், தாயார் மும்தாஜ் பேகமும் பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டியை சந்தித்தனர்.
சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது, மேக்தியின் இளமைக் காலம், நட்பு வட்டம், கொள்கை பிடிப்பு குறித்து பெற்றோரிடம் தனிப் படை போலீஸார் விசாரித்ததாக கூறப்படுகிறது. மேலும் மேக்திக்கும் ஐஎஸ் அமைப்புக் கும் இடையிலான தொடர்பு குறித்து கேட்கப்பட்டதாக தெரிகிறது.
அப்போது மேக்தியின் பெற்றோர், “மேக்தி மிகவும் மென்மையான மனம் படைத்த வன். ஒருபோதும் வன்முறை பாதைக்கு போக மாட்டான். அவனுடைய ட்விட்டர், இமெயில், பேஸ்புக் ஆகியவை கடந்த சில மாதங்களுக்கு முன் திருடப் பட்டதாக எங்களிடம் கூறினான்.
மேக்திக்கு பெங்களூரு விலோ, சொந்த ஊரிலோ நண்பர்கள் யாரும் இல்லை. ஐஎஸ் அமைப்புடன் அவனுக்கு தொடர்பிருக்க வாய்ப்பில்லை. எனவே அவனை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்” என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.
இந்த சந்திப்புக்கு பின் வெளியே வந்த அவர்கள் பத்திரிகையாளர்களிடம் பேசு வதை தவிர்த்தனர். விசாரணை முடியும் வரை ஊடகங்களிடமும், மனித உரிமை அமைப்புகளிடமும் பேசக்கூடாது என போலீஸார் அவர்களிடம் கண்டிப்புடன் கூறியதாக தெரிகிறது.
இதனிடையே போலீஸ் விசாரணை வளையத்தில் உள்ள மேக்தி, தனது பெற்றோரை சந்திக்க வேண்டும், இந்த வழக்கால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று அதிகாரிகளிடம் கோரியதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.