Last Updated : 30 Dec, 2014 08:25 AM

 

Published : 30 Dec 2014 08:25 AM
Last Updated : 30 Dec 2014 08:25 AM

பெங்களூரு குண்டுவெடிப்பில் ‘சிமி’ அமைப்புக்கு தொடர்பு?- தனிப்படை போலீஸார் 5 மாநிலங்களில் தீவிர விசாரணை

பெங்களூருவின் சர்ச் தெருவில் உள்ள 'கோகநட் குரோ' உணவு விடுதிக்கு அருகே உள்ள நடைபாதையில் நேற்று முன் தினம் இரவு 8.38 மணியளவில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இதில் சென்னையை சேர்ந்த பவானி தேவி (38), அவரது உறவினர் கார்த்திக் (21) உட்பட 5 பேர் தூக்கி வீசப்பட்டார்கள். ப‌டுகாயம‌டைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அடுத்த அரை மணிநேரத்தில் பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

உடனடியாக மோப்ப நாய்களுடன் வந்த வெடிகுண்டு நிபுணர்கள், சம்பவ‌ இடத்தை ஆய்வு செய்ததில் சக்தி குறைந்த குண்டு வெடித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, கர்நாடக முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் ஜார்ஜ் ஆகியோர் சம்பவ இட‌த்தைப் பார்வையிட்டன‌ர்.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த பவானிதேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாய மடைந்த பவானிதேவியின் உறவினர் கார்த்திக் (21), சந்தீப் (33), பெங் களூர் மிரர் செய்தித்தாளின் பத்திரிகை யாளர் நவீன்(32), வினய்(39), ஹரீஷ் குமார்(40) ஆகியோர் மல்லையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

என்.ஐ.ஏ. தீவிர விசாரணை

பெங்களூருவில் குண்டு வெடித்த இடத்தை பெங்களூரு போலீஸாரும், கர்நாடக உளவுத் துறை போலீஸாரும் விடிய விடிய சோதனை நடத்தினர். இதனிடையே நேற்று டெல்லியிலிருந்து தேசிய புலனாய்வு பிரிவு, மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் இரு குழுக்களாக தீவிர விசாரணை நடத்தினர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் கிடந்த ஆணி உள்ளிட்ட இரும்புத் துகள்களை சேகரித்தனர். அப்போது அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தால் வெடி குண்டு தயாரிக்கப்பட்டிருந்தது தெரியவந்து.

இந்த குண்டுவெடிப்பும், சென் னையில் நிகழ்ந்த ரயில் குண்டு வெடிப்பு மற்றும் புனே நகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. இவை மூன்றும் சக்தி குறைந்த வெடிகுண்டுகள் என்பதால் ஒரே அமைப்பை சேர்ந்தவர்கள் இதனை வைத்திருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்பதை கண்டறிய அப்பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங் களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை சேகரித்துள் ளனர். ஆனால் குண்டுவெடித்த இடத்துக்கு அருகேயுள்ள‌ கோகந‌ட் குரோவ் உணவகத்தில் கேமரா பொருத்தப்படாதது விசாரணையில் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிற‌து.

சதிச்செயலில் சிமி அமைப்பு?

இதனிடையே திங்கள்கிழமை பிற்பகலில் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்துறை அமைச்சர் ஜார்ஜ், கர்நாடக டிஜிபி லால்ருக்மா பச்சாவு, பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி உள்ளிட்ட காவல் துறை உயர‌திகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சதிச் செயலுக்கு அல் உம்மா, ஐஎஸ், இந்தியன் முஜாகிதீன் ஆகிய அமைப்புகள் காரணமா என்ற கோணத்தில் விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.

குண்டுவெடிப்பு சம்பவம் தொடர் பாக பெங்களூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆணையர் அலோக்குமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரிக்க முடிவெடுக்கப்பட்டது.

இதுகுறித்து சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறும்போது, “குண்டு வெடிப்பில் பலியான பவானிதேவியின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த சதியில் சிமி தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற ச‌ந்தேகம் ஏற்பட்டுள்ள‌து. கடந்த 16-ம் தேதி பெங்களூருவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. அதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பெங்களூரு தனிப்படை போலீ ஸார் தமிழ்நாடு, ஆந்திரா, கோவா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் தீவிர விசாரணை நடத்த விரைந்துள்ளனர். விரைவில் குற்றவாளிகளை கைது செய்து, தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் இதுகுறித்து வதந்ததிகளை நம்பாமல், தைரியமாக இருக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

பெங்களூரு மாநகர காவல் ஆணை யர் எம்.என்.ரெட்டி பேசும்போது, “தனிப்படை போலீஸார் பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படு வார்கள். இந்த சம்பவம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வ‌ழங்கப்படும்” என்றார்.

2005-ம் ஆண்டிலும் அதே டிசம்பர் 28'

பெங்களூருவில் கடந்த‌ 2005-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி இரவு 7.10 மணியளவில் இண்டியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் வளாகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.இதில் ஐஐடி பேராசிரியர் முனீஸ் சந்திராப் பூரி பரிதாபமாக உயிரிழந்தார். 9 ஆண்டுகளுக்குப் பிறகு அதே டிசம்பர் 28-ம் தேதி பெங்களூருவில் மீண்டும் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x