Published : 31 Dec 2014 05:37 PM
Last Updated : 31 Dec 2014 05:37 PM

கூடங்குளம் மின்சாரத்துக்கு வர்த்தகக் கட்டணம்: இந்திய அணுசக்தி கழகம் முடிவு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள யூனிட்-1 புதன்கிழமை நள்ளிரவு முதல் வர்த்தக தேவைகளுக்கான யூனிட் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யூனிட் 1-ல் இருந்து வர்த்தக ரீதியிலான மின்சார உற்பத்தியின் முக்கியத்துவம் என்னவெனில், இந்திய அணுசக்தி கழகம் (NPCIL) தாங்கள் மின்சாரம் விற்கும் மாநில மின்சார வாரியங்களிடமிருந்து என்ன கட்டணங்களை வசூலிக்கலாம் என்ற பரிசீலனையில் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து இந்திய அணுசக்தி கழகத்தின் முதன்மை அதிகாரி ஒருவர் கூறும்போது, “மாநில மின்சார வாரியங்களிடமிருந்து ஒரு யூனிட்டிற்கு என்ன கட்டணம் வசூலிக்கலாம் என்ற பரிசீலனையில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.

ஜூலை 2013 முதல் கூடங்குளம் யூனிட் 1-லிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை மாநில மின் வாரியங்களுக்கு ஒரு யூனிட் ரூ.1.22 என்ற கட்டணத்தை நிர்ணயித்து மின்வினியோகம் செய்து வந்தது.

ஆனால், வர்த்தக ரீதியாக மாநில மின்வாரியங்களுக்கு மின்சாரம் அளிக்கும்போது கட்டணம் இன்னும் கூடுதலாக்கப்படும் என்று இந்திய அணு மின்சக்தி நிறுவனம் ஏற்கெனவே கூறியிருந்தது.

கூடங்குளம் அணுமின் திட்டத்தின் இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் கூறும்போது, “யூனிட்-1 டிசம்பர் 10, 2014 முதல் 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்து வருகிறது. அதாவது நாளொன்றுக்கு 20.4 மில்லியன் யூனிட்கள் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது” என்றார்.

மத்திய மின்சாரத் துறை அமைச்சகத்தின் தற்போதைய கட்டுப்பாடுகளுக்கு இணங்க 1000 மெகா வாட் மின்சாரத்தில் தமிழகத்திற்கு 562.50 மெகாவாட் மின்சாரமும், ஆந்திராவுக்கு 50, கர்நாடகாவுக்கு 221, கேரளாவுக்கு 133 புதுச்சேரிக்கு 33.50 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். "இது மத்திய மின் துறை ஆணையத்தின் சமீபத்திய அறிவிக்கையின் படி” என்று ஆர்.எஸ். சுந்தர் தெரிவித்தார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2ஆம் யூனிட் 2015ஆம் ஆண்டு மின் உற்பத்தியைத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x