Last Updated : 02 Dec, 2014 08:43 AM

 

Published : 02 Dec 2014 08:43 AM
Last Updated : 02 Dec 2014 08:43 AM

ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்டில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலி இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.

ஜம்மு-காஷ்மீரில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடை பெறவுள்ளது. இத்தொகுதிகளில் 175 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர். இதில், துணை சபாநாயகர், நான்கு அமைச்சர்கள், தற்போது முடிவடையவுள்ள சட்டப் பேரவை உறுப்பினர்கள் 11 பேர் போட்டியிடுகின்றனர்.

குப்வாரா மாவட்டத்தில், பிரிவினைவாத தலைவராக இருந்து, அரசியலில் கால்பதித் துள்ள சஜத் கானி சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிடுகிறார். மொத்த வேட்பாளர்களில் 97 பேர் பட்டப் படிப்பு படிக்காதவர்கள். 9 பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன. 28 பேர் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்கள். 55 பேர் கோடீஸ்வரர்கள்.

வாக்குப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீர் காவல்துறை ஐ.ஜி. ஏ.ஜி மிர் கூறும்போது, “காவல்துறையினர் தவிர கூடுதலாக 220 துணைராணுவப் படைப்பிரிவுகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன” என்றார்.

இதனிடையே, சோபியான் மாவட்டத்தில் தேசிய மாநாட்டுக் கட்சிப் பிரமுகர் ஒருவர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் ஒமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு காலை தொடங்கியது. இதில், 16 தொகுதிகள் பழங்குடியினருக்கான தனித் தொகுதிகள் ஆகும். மொத்தம் 223 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், 35 பேர் பெண்கள்.

முன்னாள் முதல்வர்கள் அர்ஜுன் முண்டா, மது கோடா ஆகியோரும் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளனர். இந்த 20 தொகுதிகளில் தற்போது 8 தொகுதிகள் பாஜகவிடமும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவிடம் 5 தொகுதிகளும், காங்கிரஸிடம் 2 தொகுதிகளும் எஞ்சியவை சுயேச்சை வேட்பாளர்கள் வசமும் உள்ளன.

பாஜக 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா 18 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

ஜாம்ஷெட்பூர் கிழக்கு மற்றும் மேற்குத் தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இங்கு வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிகிறது. எஞ்சிய 18 தொகுதிகளில் மாலை 3 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x