

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது தவறானது, சட்ட விரோதமானது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மேகேதாட்டு அருகே காவிரியில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் விவசாய சங்கங்களும் கடும் கண்டனம் தெரி வித்துள்ளன. கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.மேலும் அத் திட்டத்துக்கு தடை விதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெங்களூரு, மைசூரு மக்களின் குடிநீர் தேவைக்காக காவிரியில் கர்நாடக அரசின் சார்பாக புதிய அணை கட்டுவது உறுதி. மேகேதாட்டுவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மண்டியா, ராம்நகர், சாம்ராஜ்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள். எனவே மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற்று இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.
கர்நாடக அரசின் புதிய அணை கட்டும் திட்டத்தை தமிழக அரசு எதிர்ப்பது தவறானது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் விதிகளுக்கு உட்பட்டு கர்நாடக அரசு இந்த திட்டத்தை மேற்கொள்கிறது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது தவறானது. தமிழக அரசு விதிகளை மீறி நடந்துகொள்வது சட்டவிரோதமானது.
தமிழக அரசின் இத்தகைய போக்கு எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாகிவிடும். தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்து சம்மன் வரவில்லை.
கர்நாடக சட்ட நிபுணர்கள் பதில் மனு தாக்கல் செய்ய தயாராக இருக்கிறார்கள்.உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுடன் காவிரியில் மேகேதாட்டு கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவோம்'' என்றார்.