

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உணவகத்தில் தீவிரவாதி புகுந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“சிட்னியில் நடந்துள்ள சம்பவம் என்னை வெகுவாக பாதித்துவிட்டது. இது மிகவும் மனிதாபிமான மற்ற, துரதிருஷ்ட வசமான செயல், தீவிரவாதியின் பிடியில் சிக்கியுள்ளவர்களின் பாதுகாப்புக்காக நான் கடவுளிடம் வேண்டினேன். அது வீணாகவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்” என்று மோடி கூறியுள்ளார்.
இந்திய தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்
சிட்னியில் தீவிரவாதி புகுந்த லிண்ட் சாக்லேட் கபேயில் இருந்து சுமார் 300 முதல் 400 மீட்டர் தூரத்தில்தான் இந்திய துணைத் தூதரகம் உள்ளது. அங்கு பணியாற்றி வந்த அனைத்து அதிகாரிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்ச கத்தின் செய்தித் தொடர்பாளர் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு
ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் இப்போது ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.
டோனி அபோட் எச்சரிக்கை
தீவிரவாதிகளுக்கு அந்நாட்டு பிரதமர் டோனி அபோட் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “உணவகத்தில் புகுந்து பொதுமக்களை பிடித்து வைத்தது மிகவும் மோசமான நடவடிக்கை. இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்று அபோட் கூறியுள்ளார்.
ஈரானை சேர்ந்த தீவிரவாதி
ஹோட்டலில் பிணைக் கைதிகளை பிடித்து வைத்திருந்த தீவிரவாதி ஈரானை சேர்ந்த ஹரோன் மோனிஸ் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானில் இருந்து ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் புகுந்த அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார். போலீஸ் குற்றவாளிகள் பட்டியலில் உள்ள அவரது படத்தையும், ஹோட்டலுக்குள் இருந்தபோது வீடியோவில் பதிவான அவரது உருவத்தையும் வைத்து அவர் மோனிஸ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிர் தப்பிய இந்திய பொறியாளர்
ஆஸ்திரேலியாவில் தீவிரவாதியிடம் சிக்கி மீண்ட இந்தியர் விஸ்வகாந்த் அங்கிரெட்டி ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் கங்கிரெட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர்.
பிர்லா அறிவியல் தொழில்நுட்ப கல்லூரியில் படித்த அவர், கடந்த 2 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் உள்ள இன்போசிஸ் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனர். அவர் மீட்கப்பட்டதால் இந்தியாவில் உள்ள அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நிம்மதியடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மேலும் ஒரு இந்தியரும் உயிர் தப்பியுள்ளார்.