

முக்கியக் கொள்கைகளில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ‘யு டர்ன்’ அடித்துவிட்டதாகக் குற்றம்சாட்டிய காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற விவகாரக் குழு கூட்டம் சோனியா தலைமையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மகாத்மா காந்தி சிலை முன்பு சுமார் 20 நிமிடங்கள் இப்போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் போது, முக்கியக் கொள்கைகளில் பாஜக தலைமையிலான மத்திய அரசு ‘யு டர்ன்’ அடித்திருப்பதாகக் குற்றம்சாட்டி, விமர்சித்து காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட கையேட்டை ஏந்திய படி ராகுல் காந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
பாஜக அரசு மக்களை ஏமாற்றி விட்டதாக போராட்டத்தின் போது கோஷம் எழுப்பப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், “மோடி அரசு ஏராளமான எண்ணிக்கையில் யு டர்ன்களை அடித்து விட்டது. அரசு எப்படி ஏமாற்றுகிறது என்பதை மக்கள் நிச்சயம் கவனிக்க வேண்டும்” என்றார்.
கட்சியின் நாடாளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தில், ‘மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதியின் சர்ச்சைக் குரிய பேச்சு, தேர்தல் வாக்குறுதிகளி லிருந்து யு டர்ன் அடிக்கும் பாஜக அரசின் நடவடிக்கை, சத்தீஸ்கரில் அண்மையில் நடைபெற்ற நக்ஸல் தாக்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவது’ என முடிவு செய்யப்பட்டது.