

நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா, முன்னாள் நிலக்கரித் துறைச் செயலர் பி.சி.பரக் மற்றும் சிலர் மீதான விசாரணை முடிந்து விட்டதாகக் கூறிவந்த சிபிஐ தற்போது இவர்களுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் உள்ளன என்று கூறியுள்ளது.
இது குறித்து உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆர்.எஸ்.சீமா, சிபிஐ நீதிபதி பாரத் பராசர் முன்னிலையில் மேற்கூறிய நபர்கள் முறைகேடு செய்ததற்கான போதிய சாட்சியங்கள் உள்ளது என்பதை சமர்ப்பித்தார்.
இதனையடுத்து முன்னதாக சிபிஐ அவர்கள் மீதான விசார்ணை முடிந்ததாக சமர்ப்பித்த ஆவணங்களை பரிசீலனை செய்ய அடுத்த விசாரணையை நவம்பர் 25-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார் சிபிஐ நீதிபதி.
மேலும், இந்த வழக்கு தொடர்பான மேலும் சில ஆவணங்களை சிபிஐ இன்று தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இன்றைய விசாரணையின் போது, அரசு தரப்பு வழக்கறிஞர் சீமா, “முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை முடிவு அறிக்கையை மீண்டும் கவனத்தில் கொள்ள கோருகிறோம். ஏனெனில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் உள்ளன” என்றார்.
அதற்கு நீதிபதி, “நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டுமென்றால், சிபிஐ ஆவணங்களுடன் தயாராக இருக்கிறதா?” என்றார்.
இதற்கு அரசு வழக்கறிஞர் சீமா, “இது தொடர்பாக மேலும் விசாரணைத் தேவைப்படுகிறது” என்றார்.
இதனையடுத்து விசாரணை இம்மாதம் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.